அரச பள்ளியில் மாணவனுக்கு சாதிய வன்கொடுமை!

"A disturbing incident of caste-based discrimination and abuse against a student at a government school."

கண்ணமங்கலம் ஊராட்சியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர், 5-ஆம் வகுப்புக்கு சென்று வந்தார். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இந்த மாணவன், நன்றாக படிக்கும் திறமையுடையவராக இருப்பதாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாணவன் 5-ஆம் வகுப்பு சேர்ந்ததும் வகுப்பு ஆசிரியர் மணிமேகலை மற்றும் தலைமை ஆசிரியர் அனுசுயா ஆகியோர் சாதி பெயரை சொல்லி அவமதித்து, தனிமைப்படுத்தி நடந்து கொண்டதாக மாணவனின் தந்தை கருப்பசாமி முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தார்.

அந்த புகாரில், மாணவனை வகுப்பறையில் தனியாக அமர வைத்து மற்ற மாணவர்களோடு கலந்து உட்கார அனுமதிக்காததோடு மாணவனை வலுக்கட்டாயமாக்க வேறு பள்ளிக்குப் படிக்க அழைத்துச் செல்லுங்கள். இந்த பள்ளியில் சேர்த்துக்கொள்ள மாட்டோம். உடனடியாக மாற்றுச் சான்றிதழ் (T.C.) வாங்கிக் கொண்டு செல்லுங்கள் எனத் தலைமை ஆசிரியர் மிரட்டியதாக கூறப்பட்டுள்ளது.

இந்த புகாருக்கு எதிராக வட்டார கல்வி அலுவலர் நடத்திய விசாரணை அறிக்கையில், சாதி ரீதியான துன்புறுத்தலில் தலைமை ஆசிரியர் அனுசுயா மற்றும் ஆசிரியர் மணிமேகலை ஈடுபடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்து, “சம்பந்தப்பட்ட மாணவர் மீண்டும் கண்ணமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சேர விரும்பினால் சேர்க்கை வழங்க சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியருக்கு அனுமதி அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதே நேரத்தில் பெற்றோர் தரப்பில், வட்டார கல்வி அலுவலர் எங்களிடம் எந்தவிதத்திலும் நேரில் விசாரணை நடத்தவில்லை, ஒருதலைப்பட்சமாகவே அறிக்கை கொடுத்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர். சம்பவம் தொடர்பான சரியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.