
திருவள்ளூர் மாவட்டம் விளாபாக்கம் பகுதியைச் சேர்ந்த ஹரி சதீஷ், பாஜகவின் மேற்கு மாவட்ட பொருளாளராக பணியாற்றி வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை, மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் குடும்பத்துடன் வெளியேறியிருந்த நிலையில், வீடு பூட்டப்பட்டிருந்தது.
அந்த நேரத்தை பயன்படுத்திய மர்ம நபர் ஒருவர், வீட்டின் பிரதான கதவின் பூட்டை முறித்து உள்ளே நுழைந்துள்ளார். பின்னர், வீட்டை சோதனை செய்து, வீட்டில் இருந்த 40 சவரன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ₹1 லட்சம் ரொக்கப்பணத்தை திருடிச் சென்றுள்ளார்.
குறிப்பாக, வீடு முழுவதும் மர்ம நபர் சுற்றித்திரியும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளன. இது தற்போது போலீசாரிடம் முக்கிய ஆதாரமாக பார்க்கப்படுகிறது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த வெங்கல் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்ததுடன், கொள்ளை தொடர்பான வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையனை அடையாளம் காணும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்த சம்பவம், அந்த பகுதியில் பாதுகாப்பு குறைபாடு குறித்து பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.