
திருமணம் செய்து 2-வது நாளில் நகையும் பணத்துடனும் புதுப்பெண் தலைமறைவானதால் தற்கொலை செய்துகொண்ட வாலிபர் சம்பவம் நாமக்கலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பரமத்திவேலூர் வடகரையாத்தூர் பகுதியை சேர்ந்த சிவசண்முகம் (35) முன்பே விவாகரத்து செய்யப்பட்டவர். மதுரையில் உள்ள புரோக்கர்களின் உதவியுடன் விருதுநகர் மாவட்டம் ஆலம்பட்டி பகுதியை சேர்ந்த தீபா (30) என்ற பெண்ணை கடந்த 7-ந்தேதி திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்காக புரோக்கர்களுக்கு ரூ.1 லட்சமும், தீபாவுக்கு ரூ.1 லட்சம் வரதட்சணையும் வழங்கியிருந்தார். திருமணம் முடிந்து குடும்பத்துடன் வீடு திரும்பிய நிலையில், இரண்டாவது நாளே தீபா வீட்டை விட்டு தப்பியோடியுள்ளார். திருமணத்தின் போது மணமகள் குடும்பத்தினர் யாரும் வராததும் குறிப்பிடத்தக்கது.
தீபா 9 பவுன் தங்கத் தாலியையும் திருமண புடவையையும் எடுத்துச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தீபாவை தேடியும் யாரையும் தொடர்புகொள்ள முடியாத நிலையில் மனமுடைந்த சிவசண்முகம், அக்கா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீபாவையும் சம்பந்தப்பட்ட 6 திருமண புரோக்கர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர். தீபா ஏற்கனவே பல்வேறு ஆண்களை திருமணம் செய்து மோசடி செய்திருக்கக்கூடும் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.