
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மனைவி ஜெயசுதா. இவர்களுக்கு ரிதன்யா என்ற மகளும், மிதுன் ஆதித்யா என்ற மகனும் உள்ளனர்.
மகள் ரிதன்யாவிற்கு திருப்பூர் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி, சித்திராதேவியின் மகன் கவின்குமாருடன் வரன் பேசி கடந்த 11.04.2025 அன்று திருப்பூரில் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்து 78 நாட்களே முடிவடைந்த நிலையில் அவிநாசியை அடுத்து சேயூர் அருகே செட்டிபுதூர் பகுதியில் சாலையோரம் காருக்குள் ரிதன்யா வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சேயூர் போலீசார் காரில் இருந்த ரிதன்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ரிதன்யா தற்கொலை செய்துகொண்டதை உறுதி செய்தனர்.
ரிதன்யா தற்கொலை செய்து கொள்ளும் முன்பு தனது தந்தைக்கு உருக்கமாக பல ஆடியோக்களை அனுப்பி உள்ளார். அந்த ஆடியோக்களில் கணவன் தன்னை உடல் ரீதியாகவும், மாமனார் மற்றும் மாமியார் மனரீதியாகவும் சித்திரவதை செய்தனர் என்றும் எனது இந்த முடிவிற்கு இவர்கள் மூவரும் தான் காரணம் என்றும் கூறியுள்ளார்.
மேலும் ரிதன்யாவை உடல்ரீதியாக கொடுமைபடுத்தியதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று கணவர் கவின்குமார் மிரட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த ரிதன்யா தென்னை மரத்துக்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதன் பின்னணியை ஆர்.டி.ஓ மோகனசுந்தரம் விசாரணை மேற்கொண்டார். விசாரணையின் முடிவில் ரிதன்யாவின் பெற்றோரும் உறவினரும் மூவர் மீதும் தாக்குதலை ஏற்படுத்தியுள்ளனர். மேலும் அவர்களை கைது செய்ய வேண்டும் என்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் காவல்துறையினர் சமரசம் செய்து ரிதன்யாவின் உடலை ஒப்படைத்தனர்.
மேலும் 500 சவரன் என பேசி 300 சவரன் கொடுத்ததாகவும் 70 லட்சம் மதிப்பிலான கார் ஒன்றும் கொடுத்ததாக ரிதன்யாவின் பெற்றோர் விசாரணையில் கூறியுள்ளனர். மேலும் 2⅟2 கோடி செலவில் திருமணத்தை முடித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ரிதன்யா தனது தந்தைக்கு அனுப்பிய ஆடியோக்களின் அடிப்படையில் கணவன், மாமனார், மாமியார் என மூவரும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது 194 பி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.