சாதி பெயரை கூறி சிறுவனை கட்டி வைத்து தாக்கிய வழக்கில் நால்வர் கைது – ஒருவன் தலைமறைவு

சாதி பெயரை கூறி சிறுவனை கட்டி வைத்து தாக்கிய வழக்கில் நால்வர் கைது – ஒருவன் தலைமறைவு

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே 17 வயது பட்டியலின சிறுவனை சாதி பெயரை கூறி கட்டி வைத்து இரவு முழுவதும் தாக்கிய சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக நால்வரை காவல் துறையினர் கைது செய்துள்ள நிலையில், முக்கிய குற்றவாளி தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது 

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள தென்கரைக்கோட்டை பகுதியில் வசிக்கும் தருண் (17), அதே பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணனின் நெற்கதிர் அடிக்கும் வண்டியில்  சில நாட்கள் வேலை பார்த்து வந்துள்ளார்  .

பின்னர்  தருணின்  உறவினர் ஒருவர் வண்டி வாங்கியதால்,  ராமகிருஷ்ணனின் வேலையிலிருந்து விலகி உறவினருடன் இணைந்து தொழில் புரிந்து  வந்துள்ளார்

இதையறிந்த ராமகிருஷ்ணன், தருணை பற்றி அவரது உறவினரிடம் தவறான முறையில் கூறியதாகவும், இதுபற்றி தருணிடம் அவரது உறவினர் நேரடியாக கேட்டதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் தருண் மற்றும் அவரது நண்பர் இருவரும் தென்கரைக்கோட்டைக்கு செல்லும்போது  ராமகிருஷ்ணனை சந்தித்து , என்னைப் பற்றி  ஏன் தவறாக சொன்னீர்கள் என்று  விளக்கம் கேட்டுள்ளனர்.

இதனையடுத்து, அரூர் அருகே உள்ள சர்க்கரை ஆலைக்கு அண்மையிலுள்ள ஒரு பெட்ரோல் பங்கில், ராமகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து தருணை சாதி பெயரை கூறி திட்டி,  இரவு முழுவது கட்டி வைத்து தாக்கியுள்ளனர் 

இதில் படுகாயமடைந்த  தருண் தற்போது, அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து, வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் பள்ளிப்பட்டு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

போலீசார் விசாரணை நடத்தி, சம்பவத்துடன் தொடர்புடைய செல்வம், செந்தில், செல்வராஜ்  உட்பட நால்வரை கைது செய்துள்ளனர். 

அதேசமயம், முக்கிய குற்றவாளியான  ராமகிருணன்  தலைமறைவாகியுள்ள நிலையில் தேடுதல் பணிகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.