
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனின் காட்விக் விமான நிலையத்திற்கு இன்று மதியம் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்கு ஆளானது.
இந்த போயிங் விமானம், மேகானி நகர் குடியிருப்பு பகுதியில் கீழே விழுந்து நொறுங்கியது. அந்த பகுதியிலுள்ள பயிற்சி மருத்துவர் குடியிருப்புகளின் மீது மோதியதால், அங்கு இருந்த 60 பேரை பற்றிய தகவல்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இந்த விமானத்தில் 2 விமானிகள் மற்றும் 10 ஊழியர்கள் உட்பட மொத்தம் 242 பேர் பயணம் செய்துள்ளனர் . இதில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடப்படுகிறது. மேலும் 12 வயதிற்கு உட்பட்ட 14 சிறுவர்களும் இந்த விமானத்தில் இருந்துள்ளனர்
இந்த விபத்தில் ஆரம்பத்தில் 110 பேர் உயிரிழந்ததாக தகவல் வந்தது. தற்பொழுது அந்த எண்ணிக்கை மேலும் உயர்ந்து, 133 ஆக அதிகரித்துள்ளது.
விபத்து நடந்தவுடன் 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டன. தீவிர மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விபத்து நாட்டையே உலுக்கியுள்ளதாகவும், பல்வேறு உயர்மட்ட அதிகாரிகள் நிலைமையை தொடர்ந்து கவனித்து வருகிறார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன