கட்டணமில்லா பேருந்துப் பயணத்தை  ”ஓசி” என கூறிய திமுக எம்.எல்.ஏ மீது பா.ஜ.க. கடும் விமர்சனம்

Image showing BJP leaders criticizing a DMK MLA over his controversial remark calling free bus travel "Oosi" (freebie).

கட்டணமின்றி பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிரை “ஓசி” என்று சொல்லி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜனும் அதே போல பேசியிருப்பதாக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். 
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

கட்டணமின்றி பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிரை “ஓசி” என்று திமுகவைச் சார்ந்த ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் விமர்சித்திருப்பது கண்டனத்துக்குரியது.

இதற்கு முன் முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடியும் இதே போன்று பேருந்துகளில் கட்டணமின்றி பயணிப்போரை “ஓசி” என்று தரம் தாழ்ந்து விமர்சித்ததும், திமுக பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் “ரூ.1000 வாங்கியதால் தானே பளபளனு இருக்கீங்க” என்று பெண்களைக் கொச்சையாக விமர்சித்ததும், திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன் “அம்மாவுக்கும் ரூ.1000, பொண்ணுக்கும் ரூ.1000” என சபை நாகரிகமன்றி விமர்சித்ததும் குறிப்பிடத்தக்கது.

மக்கள் நலனை மேம்படுத்தும் போர்வையில் திட்டங்களை அமல்படுத்தி அதன் விளம்பரங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதும், பின் பயனாளிகளை “ஓசி” என்று கீழ்த்தரமாக விமர்சிப்பதும் தான் திராவிட மாடல் போலும்!

ஒவ்வொரு முறையும் பெண் பயனாளிகளை விமர்சிப்பதில் காட்டும் முனைப்பை ஓட்டை உடைசலாக இருக்கும் பேருந்துகளை சரிபடுத்துவதிலோ அல்லது அனைத்து மகளிருக்கும் 1000 ரூபாய் கிடைப்பதை உறுதி செய்வதிலோ

அறிவாலயம் தலைவர்கள் காட்டாதது ஏன்?

அதிகார மமதையில், எளிய மக்களை எள்ளி நகையாடி ஏளனப்படுத்துவது ஏற்புடையதல்ல! மகளிரை அவமதிக்கும் திமுக அரசு இனியாவது திருந்தட்டும்! என்று கூறியுள்ளார்.