“முருகனை அரசியலுக்குப் பயன்படுத்துகிறது பா.ஜ.க”: சீமான் குற்றச்சாட்டு

Seeman accuses BJP of exploiting Lord Murugan for political purposes.

மதுரை மாவட்டத்தில் இந்து முன்னணியின் ஏற்பாட்டில் வரும் 22ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், மத்திய அமைச்சர்கள் மற்றும் பா.ஜ.க. தேசிய தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கடுமையாக விமர்சித்தார். பா.ஜ.க. கட்சி இவ்வளவு நாள் முருகனை பற்றிக் கருத்து தெரிவிக்காத நிலையில், இப்போது மட்டுமே மாநாடு நடத்துவது அரசியல் நோக்கத்திலேயே எனக் குற்றம்சாட்டினார்.

“ அவர்கள் ஒப்புக்கு பேசுகிறார்கள். நான் உளமாற முருகனை பற்றி பேசுகிறேன். நான் முருகனின் பேரன் . நான் செய்வதற்கும், அவர்கள் செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது . பா.ஜ.க. முருகனை கொண்டு ஆட்சியை பிடிக்கலாம் என நினைக்கிறது, ஆனால் அது நடக்காது என அவர் தெரிவித்தார்.

மேலும், “உத்தரப் பிரதேசத்தில் ராமரை, கேரளத்தில் ஐயப்பனை, ஒடிசாவில் ஜெகன்னாதரை அரசியலுக்குப் பயன்படுத்தும் பா.ஜ.க., தமிழ்நாட்டில் முருகனை தேர்ந்தெடுத்துள்ளது. இது மத அரசியல்தான். மக்கள் நல அரசியலை பா.ஜ.க. செய்யவில்லை,” என சீமான் கடுமையாக விமர்சித்தார்.

அவரது இந்த பேச்சு, முருக பக்தர்கள் மாநாட்டின் பின்னணியில் இருக்கும் அரசியல் நோக்கங்களைப் பற்றிய விவாதங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.