
தமிழ் திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா, சென்னையில் நேற்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
உதவி இயக்குநர், இயக்குநர் என திரையுலகில் பல்வேறு நிலைகளில் பணியாற்றிய மனோஜின் திடீர் மறைவு திரையுலகினரை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
மனோஜ் 1976 ஆம் ஆண்டு, தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் பாரதிராஜா மற்றும் சந்திரலீலா தம்பதியினருக்கு மகனாக பிறந்தார்.
சிறு வயது முதல் தந்தையின் வழியில் திரைப்படத்துறையின் பரிச்சயத்துடன் வளர்ந்த மனோஜ், திரையுலகில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார்.
பள்ளி முடிவதற்குள், மனோஜ் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பம்பாய் திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியைத் தொடங்கினார்.
திரை வாழ்க்கையில் மணிரத்னத்தை தனது “காட் ஃபாதர்” என்று பல இடங்களில் குறிப்பிட்ட மனோஜ், அவரிடம் இருந்து திரைப்படத் துறையின் பல நுணுக்கங்களை கற்றுக்கொண்டார்.
பின்னர் 1999ஆம் ஆண்டு, பாரதிராஜா இயக்கிய தாஜ்மஹால் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.
இப்படம் பெரிதாக வெற்றி பெறவில்லை என்றாலும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இடம்பெற்ற பாடல்கள் பிரம்மாண்டமான வரவேற்பைப் பெற்றன.
தொடர்ந்து, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய சமுத்திரம் திரைப்படத்தில் நடிகர் சரத்குமாரின் தம்பி கதாபாத்திரத்தில் முக்கியமான ரோலில் நடித்தார்.
இப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அதன்பின், பாரதிராஜா இயக்கத்தில் கடல் பூக்கள் படத்தில் நடிகர் முரளியுடன் இணை நாயகனாக நடித்தார்
இப்படம் தோல்வி அடைந்த போதிலும், பாரதிராஜா இந்த திரைபடத்துக்கு சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதைப் பெற்றார்.
அதற்கு பின்னர், வருஷமெல்லாம் வசந்தம், பல்லவன், சாதுர்யன், ஈர நிலம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்த போதும், எதிர்பார்த்த வெற்றியை அவர் பெற முடியவில்லை.
இருப்பினும் திரையுலகில் வெற்றியைத் தேடி தொடர்ந்து முயற்சி செய்து வந்த மனோஜ், மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவரது மறைவுக்கு திரையுலகத்தினர், அரசியல் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
முதலமைச்சர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், அமமுக பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன், தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், வி.கே.சசிகலா, நடிகர் சரத்குமார் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், தற்போது தளபதி விஜய், கார்த்தி, சூர்யா, சீமான், வைரமுத்து , கவுண்டமணி , நாசர் ஆகியோரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.