ராமதாஸை சந்தித்த ஆடிட்டர் குருமூர்த்தி : பாஜக கூட்டணியில் இனைகிறதா பாமக?

Auditor Gurumurthy meets PMK leader Ramadoss sparking alliance speculations with BJP


பட்டாளி மக்கள் கட்சியில் (பா.ம.க.) சமீபத்தில் வெடித்துள்ள தந்தை-மகன் மோதல் வலுபெற்று வருகின்றது.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணிக்கு “தலைமைத் திறன் இல்லை” எனவே கட்சி வழிநடத்த முடியாது என்ற அளவுக்கு கடுமையான விமர்சனங்களை எழுப்பியிருந்தார். 

இதைத் தொடர்ந்து, “அன்புமணி கட்சியில் இருந்து நீக்கப்படுவாரா?”, “பொதுக்குழு எப்போது?” போன்ற கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்ப, பதில் கூறுவதாக மட்டும் ராமதாஸ் தெரிவித்திருந்தார்.

இந்த பதற்றமான சூழ்நிலையில், சமாதான முயற்சியாக அன்புமணி தைலாபுரம் தோட்டத்திற்கு நேரடியாக சென்று தனது தந்தையை சந்தித்து பேசியுள்ளார். சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற அந்த சந்திப்புக்குப் பிறகு,  ஊடகவியலாளர்களை சந்திக்காமலேயே அவர் கிளம்பி விட்டதாக கூறப்படுகின்றது.

அதைத் தொடர்ந்து அதிமுக மூத்த தலைவர் சைதை துரைசாமியும், பாஜகவுடன் நெருக்கம் கொண்டுள்ள ஆடிட்டர் குருமூர்த்தியும் தைலாபுரத்திற்கு சென்று ராமதாஸை நேரில் சந்தித்தனர்.

 இது முக்கியமான  பேச்சுவார்த்தையாகவே கருதப்படுகிறது. மேலும், இந்த சந்திப்பு ராமதாஸ் அழைப்பின் பேரில் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாமக பிளவால் பாஜக கூட்டணிக்கும் பாதிப்பு ஏற்படலாம் என்ற கட்டுரை துக்ளக் வார இதழில் வெளியானதையடுத்து அதை வாசித்த ராமதாஸ் நேரடியாக குருமூர்த்தியை அழைத்ததாக கூறப்படுகிறது.

இதன் பின்னணியில், பா.ம.க. பிளவை சமாளிக்கவும், கட்சியை மீண்டும் ஒருங்கிணைக்கவும் பரபரப்பான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக தெரிகின்றது

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக-அதிமுக கூட்டணி உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், பாமகவுக்கான மூன்று முக்கிய வாய்ப்புகள் மட்டுமே உள்ளது. 

ஒன்று திமுகவுடன் சேருவது, இரண்டாவது அதிமுக-பாஜக கூட்டணியில் தொடர்வது, மூன்றாவது விஜய் தலைமையிலான த.வெ.க.வுடன் புதிய கூட்டணியில் செல்லும் முயற்சி. ஆனால், திமுக கூட்டணியில் விசிக ஏற்கனவே இருப்பதும், த.வெ.க. முதல்முறையாக தேர்தலில் களமிறங்கியிருப்பது போன்ற  காரணங்களால் , பாமக பாஜக-அதிமுக கூட்டணியிலேயே இனைவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் பரவுகின்றன.

இந்நிலையில், அன்புமணி விரும்பும் பாஜக மற்றும் ராமதாஸ் விரும்பும் அதிமுக ஒரே கூட்டணியில் இருப்பது, பாமகவின் சமாதானத்தையும், மீள்இணைப்பையும் சாத்தியமாக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர். 

இதற்கேற்ப, சைதை துரைசாமி மற்றும் ஆடிட்டர் குருமூர்த்தி இருவரும் பா.ம.க.வின் உண்மையான நிலையைப் புரிந்து, கட்சியை மீண்டும் ஒன்றினைக்கும் வகையில் ராமதாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கணிக்கப்படுகின்றது 

 ஜூன் 8ஆம் தேதி பாஜக மூத்த தலைவரான அமித் ஷா தமிழ்நாடு வருகிறாரென்பதும், இந்த சந்திப்புகளுக்கு கூடுதல் அரசியல் முக்கியத்துவம் தருவதாக அமைந்துள்ளது