
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் 47 வது லீக் ஆட்டமான ராஜஸ்தான் ராயல்ஸ் குஜராத் டைட்டன்ஸ் அணி இடையிலான போட்டி ஜெய்பூரில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் குவித்தது.
210 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் 14 வயது சிறுவனான சூர்யவன்ஷி ஆகியோர் களமிறங்கினர்.
முதல் பந்திலேயே அதிரடியாக தொடங்கிய இருவரும் தொடர்ந்து பவுண்டரி மற்றும் சிக்சர்களுக்கு மட்டுமே பந்தை விளாசினர். இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சளாரான இஷாந்த் சர்மா வீசிய 3 ஓவரில் மட்டுமே 22 ரன்களை குவித்தார் சூர்யவன்ஷி,
ஒரு கட்டத்திற்கு பிறகு குஜராத் அணியின் பவுலர்கள் வீசிய அனைத்து பந்துகளையுமே சிக்சர்கர் மற்றும் பவுண்டர்களிக்கு விளாசிய சூர்யவன்ஷி 35 பந்துகளில் 100 ரன்களை எட்டி ஐபிஎல்லில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
இதன் மூலம் டி20 கிரிக்கெட்டிலும், ஐபிஎல் தொடரிலும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி உள்ளார்.
சூர்யவன்ஷியின் சாதனைகள்
உலக டி20 கிரிக்கெட்டில் இளம் வயதில் (14 வயது 32 நாட்களில்) சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார். இதற்கு முன்னர் விஜய் ஜோல் (18 வயது 118 நாட்கள்) சதம் அடித்ததே சாதனையாக இருந்தது, தற்போது சூர்யவன்ஷி இதை முறியடித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் அதிவிரைவாகவும், இளம் வயதிலும் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை சூர்யவன்ஷி பெற்றுள்ளார். இதற்கு முன் யூசுப் பதான் 37 பந்துகளில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக 2010இல் சதம் அடித்திருந்தார். அதையும் தற்போது சூர்யவன்ஷி முறியடித்துள்ளார்.
ஐபிஎல் டி20 தொடரில் அதிவேகமாக சதம் அடித்த வகையில் கிறிஸ் கெயிலுக்கு (30 பந்துகள்) அடுத்ததாக 35 பந்துகளில் சதம் அடித்து 2வது வீரராக சூர்யவன்ஷி இடம் பெற்றார்.
சூரியவன்ஷி 17 பந்துகளில் அரைசதம் அடித்ததன் மூலம் ராஜஸ்தான் அணிக்காக அதிவேகமாக அரைசதம் அடித்த 2வது வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
சூர்யவன்ஷி நேற்றைய ஆட்டத்தில் மட்டும் 11 சிக்ஸர்களை விளாசினார். இதன் மூலம் ஐபிஎல் டி20 தொடரில் ஒரே போட்டியில் அதிக சிக்ஸர்களை விளாசிய தமிழக வீரர் முரளி விஜயின் சாதனையைச் சமன் செய்தார்.
ஐபிஎல் தொடரில் இளம் வயதில் சதம் அடித்த வீரர்களில் 4வது வீரராக வைபவ் சூர்யவன்ஷி இடம் பெற்றார். இளம் வயதில் சதம் அடித்தவர்களில் மணிஷ் பாண்டே (19 வயது, 253 நாட்கள்), ரிஷப் பந்த் (20 வயது 218 நாட்கள்), தேவ்தத் படிக்கல் (20 வயது 289 நாட்கள்) இவர்கள் வரிசையில் தற்போது சூர்யவன்ஷியும் இணைந்துள்ளார்.
ஐபிஎல் ஏலத்தில் 1.10 கோடிக்கு சூர்யவன்ஷியை போட்டிப்போட்டு ராஜஸ்தான் அணி வாங்கியது, அப்போது 14 வயது சிறுவனக்கு 1 கோடியா என பலரும் விமர்சித்தனர், தற்போது அந்த அனைத்து விமர்சனங்களுக்கும் தனது சதத்தின் மூலம் பதில் அளித்துள்ளார்.
இதையடுத்து கிரிக்கெட் உலகம், அரசியல், சினிமா என பல்வேறு துறைகளில் இருந்து சூர்யவன்ஷிக்கு பாராட்டு மழை கொட்டி வருகிறது. மேலும் உலக கிரிக்கெட் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.