
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம், திருவாணைக்கோவில் பகுதியில் செயல்படும் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றிய நா. மாரியப்பனுக்கு, நிலுவையில் இருந்த 7.5 மாத ஊதியத் தொகை மற்றும் M.A. படிப்புக்கான ஊக்கத் தொகையை வழங்க வேண்டியிருந்தது.
இதனை வழங்குவதற்காக, அதே பள்ளியில் இளநிலை உதவியாளராக (கிளார்க்) பணியாற்றிய ரெங்கராஜன் (வயது 63) ரூ.2,000 லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது.
லஞ்சம் வழங்க விரும்பாத மாரியப்பன், 2009 செப்டம்பர் 30ஆம் தேதி திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் முறையீடு செய்தார். அதிகாரிகளின் ஆலோசனைப்படி, ரசாயனம் பூசப்பட்ட ரூ.2,000 பணத்தை ரெங்கராஜனிடம் கொடுத்தார். அந்த நேரத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், ரெங்கராஜனை கையும் களவுமாக கைது செய்தனர்.
இந்த வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. இன்று இந்த வழக்கு நீதிபதி புவியரசு முன் விசாரணைக்கு வந்தபோது, அனைத்து தரப்பினரின் வாதங்களையும் பரிசீலித்த நீதிபதி, ரெங்கராஜன் மீது தீர்ப்பு வழங்கினார்.
அதன்படி, லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.5,000 அபராதமும், மேலும் அரசு அதிகாரியாக பதவியை தவறாக பயன்படுத்தியதற்காக 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
அபராதத் தொகையை செலுத்தத் தவறினால், தலா 6 மாதம் என மொத்தம் 1 ஆண்டு கூடுதல் சிறைத் தண்டனையும் அனுபவிக்க வேண்டியதாக உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கில், லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி மணிகண்டன், இன்ஸ்பெக்டர் நர்சக்திவேல் ஆகியோர் மும்முர விசாரணையும், உரிய ஆதாரங்களுடன் சாட்சிகளை ஆஜர்படுத்தியும் சிறப்பாக செயல்பட்டனர். அரசு வழக்கறிஞர் கோபிகண்ணனும் வழக்கை வலுப்படுத்தி வெற்றி பெற்றதற்காக பாராட்டப்பட்டுள்ளார்.