அண்ணாமலையின் கூற்று அவரது தனிப்பட்ட கருத்து தான்: வானதி சீனிவாசன் விளக்கம்

Vanathi Srinivasan clarifies that Annamalai's recent statement reflects his personal opinion.

2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி , பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார். “2026-ல் கூட்டணி ஆட்சி என நான் சொல்ல மாட்டேன். நான் பாஜக ஆட்சி என்றுதான் சொல்வேன்” என அவர் உறுதியாக தெரிவித்திருந்தது, அதிமுக – பாஜக கூட்டணியை பற்றிய சர்ச்சையை உருவாக்கியது.

அண்ணாமலை தனது கட்சியை உயர்த்தும் நோக்கில், “நான் பாஜகவின் தொண்டன். உயிர் இருக்கும் வரை கட்சி வளர்ச்சிக்காகவே செயல்படுவேன். எங்கு பேச வேண்டுமோ பேசுவேன், எங்கு அமைதியாக இருக்க வேண்டுமோ அப்படியே இருப்பேன்” எனக் கூறினார்.

மேலும், தேர்தலின் போது கூட்டணிக் கட்சிகள் இணைந்து முடிவெடுப்பார்கள் என்றும், தன்னை பொறுத்தவரை பாஜக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாகவும் கூறினார்.

இந்நிலையில், அண்ணாமலை வெளியிட்ட இந்தக் கருத்து கட்சியின் நிலைப்பாடா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார் பாஜக மூத்த தலைவி வானதி சீனிவாசன். “அண்ணாமலை கூறியது அவரது தனிப்பட்ட கருத்து மட்டுமே. கட்சியின் தேசிய தலைமை எடுக்கும் முடிவே கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு ஆகும். அந்த முடிவிற்கே ஏற்ப செயற்படுவோம்,” என அவர் உறுதிபடுத்தினார்.

இதன் மூலம், கூட்டணி அரசியல் தொடர்பாக பாஜகவில் உள்ள குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளாரா என்ற கேள்வியும் எழுகிறது. இருப்பினும், கட்சி உள்புறத்தில் இதுபோன்ற கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து பேசப்படும் சூழ்நிலை காணப்படுகிறது.