
மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காடு பகுதியில் அரசு டாஸ்மாக் கடை அருகே பொது வெளியில் அட்டைப் பெட்டிகளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் பலமுறை புகார் அளித்திருந்தனர்.
இந்த வீடியோவில் காலை 6 மணி முதலே சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறும் காட்சி பதிவானது. தகவல் கிடைத்ததும் மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு போலீசார் அங்கு விரைந்து சென்று சித்தர்காடு மூவலூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த செல்வம் (42) என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 25 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து செல்வத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு முன்பே மதுபாட்டில்கள் வெளிச்சந்தைக்கு எப்படிக் கிடைக்கின்றன என்ற கேள்வி தற்போது சமூக ஆர்வலர்களிடம் எழுந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.