அதிமுக உயிரோட்டம் உள்ள இயக்கம்; துரோகம் செய்பவர்கள் நடு ரோட்டிலே நிற்பார்கள் – எடப்பாடி பழனிசாமி

"Edappadi Palaniswami warns that traitors to AIADMK will be left behind as the party moves forward with strength"


அறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்தநாளையொட்டி சென்னை வடபழனியில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் (15.09.2025) நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.

அவர் பேசியதாவது:
“ஆட்சி செய்கின்றபோதும், இப்போதும் மத்தியிலிருப்பவர்கள் யாரும் நமக்கு அச்சுறுத்தவில்லை. நமக்கு நன்மைதான் செய்தார்கள். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சிலர் கட்சியை கைப்பற்ற, ஆட்சியை கவிழ்க்க முயன்றனர். அதிலிருந்து அதிமுகவை காப்பாற்றியது மத்தியிலிருப்பவர்கள்தான்.

நன்றி மறப்பது நன்றன்று; நன்றல்லது அன்றே மறப்பது நன்று என வள்ளுவர் சொன்னார். அந்த நன்றியோடு நாங்கள் இருக்கிறோம். யார் உழைக்கிறார்களோ அவர்களுக்கே இடம் உண்டு. வெட்டிப் பேச்சுக்கே இங்கே இடமில்லை.

அதிமுக நூறு ஆண்டுகள் தொடரும். சிலர் கட்சியை அடமானம் வைக்க முயல்கின்றனர். அதிலிருந்து அதிமுகவை காப்பாற்ற நாம் துணிந்து நிற்க வேண்டும். அதிமுகக்கு துரோகம் செய்பவர்கள் நடு ரோட்டிலே நிற்பார்கள்; அவர்களுக்கு விலாசமே இருக்காது.

இந்த இயக்கம் உயிரோட்டம் கொண்ட இயக்கம். எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற இரு பெரும் சக்திகள் கொண்டது. இறைவனால் படைக்கப்பட்ட, ஏழைகளுக்காக தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் இது. குடும்பத்துக்காக அல்ல; உழைத்தால் யாரும் அதிமுகவில் உயர்ந்த இடத்துக்குச் செல்ல முடியும்” எனத் தெரிவித்தார்.