அதிமுக – பாஜக கூட்டணி; யாருக்கு பலம்? யாருக்கு பலவீனம்? வரலாற்று நிகழ்வுகள் கூறுவது என்ன?

அதிமுக - பாஜக கூட்டணி; யாருக்கு பலம் யாருக்கு பலவீனம்

கடந்த ஒரு மாத காலமாகவே அதிமுக- பாஜக கூட்டணி குறித்து பேசி வந்த நிலையில், 565 நாட்கள் கழித்து மீண்டும் அதிமுக, பாஜக இடையே கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக அமித்ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அதிமுக – பாஜக கூட்டணி பயணம் எப்போது தொடங்கியது?

இந்த கூட்டணி மூலம் யாருக்கு பலம்? யாருக்கு பலவீனம்?

வரலாற்று நிகழ்வுகள் கூறுவது என்ன? என்பதை பற்றி முழுமையாக இந்த பதிவில் காண்போம்

1998 ல் மக்களவைத் தேர்தலின்போது, பாரதிய ஜனதாவுடன் முதன்முறையாக தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைந்தது. ஆனால், 1999 ல் பாரதிய ஜனதா தலைமையிலான அரசுக்கான ஆதரவை அதிமுக திரும்பப் பெற்றது. இதையடுத்து, அப்போதைய வாஜ்பாய் ஆட்சி கவிழ்ந்தது. அதன் பிறகு 2004ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் மீண்டும் கைகோர்த்தது அதிமுக. அதன்பின், ஜெயலலிதா மறைவு வரை பாரதிய ஜனதாவுடன் அதிமுக கூட்டணி அமைக்கவில்லை.

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மோடியா? லேடியா என்ற முழக்கத்துடன் ஜெயலலிதா பரப்புரை செய்தார். அதன் பிறகு 2016 சட்டமன்றத் தேர்தலிலும், அதிமுக தனித்தே போட்டியிட்டது.

ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு, 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக,பாஜக மீண்டும் இணைந்து போட்டியிட்டன. அந்த தேர்தலில் தேனி நாடாளுமன்ற தொகுதி தவிர மற்ற அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தது, குறிப்பாக தேனியில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் மகன் ஓ.பி ரவீந்திரநாத் மட்டும் தான் வெற்றி பெற்றார்.

அதற்குப் பிறகு 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் இதே கூட்டணியில் தேர்தலை சந்தித்த அதிமுக 66 இடங்களும் பாஜக 04 இடங்களையும்  பிடித்தன…. ஆனால் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பாஜக அதிமுக இடையே உரசல்கள் ஏற்பட்டன. முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை , ஜெயலலிதா குறித்து அண்ணாமலை பேசிய பேச்சுக்கள் அதிமுகவில் கோபத்தை ஏற்படுத்தியது….

இதையடுத்து செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்டி அதிமுக பாஜகவின் கூட்டணியை விட்டு வெளியேறுவதாக இபிஎஸ் அதிகாரபூர்வமாக அறிவித்தார். கடந்த 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது இரு கட்சிகளுமே வெவ்வேறு கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால் திமுக கூட்டணி அனைத்து இடங்களையும் கைப்பற்றியது.

இதற்குப் பிறகும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் திட்டவட்டமாக கூறி வந்தனர்.

இந்நிலையில் திடீர் பயணமாக எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றார், பயணம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட பொழுது, டெல்லி உள்ள புதிய கட்சி அலுவலகத்தை பார்வையிடுவதற்காகவே வந்திருப்பதாக அறிவித்தார்.

இதனை தொடர்ந்து கேபி.முனுசாமி, எஸ்பி.வேலுமணி, சண்முகம் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்களும் டெல்லி சென்றனர். இதன் பிறகு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் இரவில் சந்தித்தனர். 

இந்த சந்திப்பின் பிறகு அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில்  பதிவு ஒன்றை வெளியிட்டார்.  அதில் 2026  தமிழகத்தின் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்த பின்பு மது வெல்லமும், ஊழல் புழலும் முடிவுக்கு வந்துவிடும் என தமிழிலும் இந்திலும் பதிவிட்டிருந்தார்.

இதுகுறித்து எடப்பாடியிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்ட பொழுது மக்கள் பிரச்சணை குறித்து மட்டும் பேசவே போனதாகவும், மற்ற அரசியல் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என கூறினார்.

இதனை தொடர்ந்து  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திடீர் பயணமாக டெல்லி சென்றார். இதன் பிறகு அண்ணாமலை மாநில தலைவர் பதவியிலிருந்து மாற்றாப்படலாம் என்ற யூகம் அரசியல் வட்டாரங்களில் எழுந்தது.

ஏனென்றால் கடந்த காலத்தில் அதிமுக தலைவர்களுடன் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால், தற்போது அதிமுகவுடன் கூட்டணி வைக்க தடையாக அண்ணாமலை இருக்க கூடாது என  பாஜக தலைமை கருதுவதாக தகவல் வெளியானது. மேலும் கடந்த காலமே அண்ணாமலையை மாநில தலைவர் பதவியிலிருந்து மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை அதிமுக முன்வைத்தாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தன..,

இந்நிலையில் இரண்டு நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வந்தார்.

(நயினார் நாகேந்திரன் போட்டியின்றி பாஜக மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்)

தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைவதாக அதிகாரப்பூர்வமாக அமைச்சர் அமித்ஷா செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார். மேலும் 2026ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் அமையும் என்று கூறினார்.

அதிமுக, பாஜக கூட்டணியில் இதுவரை தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதம் 

1998 பொதுத் தேர்தல்:-

அதிமுக – 23 இடங்கள் (26.3%)

பாஜக    –  5  இடங்கள் (6.9%)

2004 பொதுத்தேர்தல்:-

அதிமுக – 0 இடங்கள் (29.77%)

பாஜக    –  0 இடங்கள் (5.7%)

2019  பொதுத்தேர்தல்:-

அதிமுக – 1 இடங்கள் (19.39%)

பாஜக    –  0 இடங்கள் (3.62%)

2021 சட்டமன்றம் தேர்தல்:-

அதிமுக – 66இடங்கள் (33.3%)

பாஜக    –  4 இடங்கள் (2.62%)

மூன்றாவது முறையாக பொதுத் தேர்தலில் வெற்றி, 12 மாநிலங்களில் நேரடி ஆட்சி அதிகாரம்,8 மாநிலங்களில் கூட்டணி ஆட்சி என இந்தியாவின் மிகப் பெரிய சேதிய கட்சியாக பாஜக இன்று உருவெடுத்துள்ளது, இருப்பினும் தமிழ்நாடு, கேரளா உட்பட சில மாநிலங்களில் பாஜகவால் கால் ஊன்ற முடியவில்லை.

கடைசியாக நடைபெற்ற பொதுத்தேர்தலில் கேரளாவில் கூட ஒரு தொகுதியை வென்று இருந்தினர். ஆனால் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட பாஜகவால் வெல்ல முடியவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை…

தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்க பல்வேறு கட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டன, ஆனால் எந்த பயனும் அளிக்கவில்லை . ஏனென்றால் பாஜக கொள்கையின் மீது தமிழ்நாட்டு மக்கள் முரண்பாட்டுடன் இருந்தனர், மேலும் பாஜகவின் மீது மதச் சாயம் பூசப்பட்டது. இதனால் தான் தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கை பெற கடினமாக உள்ளது.

தமிழ்நாடு பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு இந்த நிலை சற்று மாறுதலை கண்டுள்ளது. 2021 சட்டமன்ற தேர்தலில் 2.62% வாக்குகள் பெற்ற பாஜக, கடந்த பொதுத்தேர்தலில் 11.24% வாக்குகள் பெற்றது. இது கடந்த பொதுத்தேர்தலை(2019) காட்டிலும் சுமார் 7.6% வாக்குகள் உயர்ந்திருக்கிறது.

தற்போது தமிழ்நாட்டில் பாஜக சற்று வளர்ச்சியை கண்டுள்ளது. இந்த சூழலை பயன்படுத்திக் கொண்டு ஆட்சியில் வர வேண்டும் என பாஜக எண்ணுகிறது. ஆனால் பாஜக நேரடியாக வந்தால் தமிழ்நாட்டு மக்கள் நிராகரித்துவிடுகின்றனர். அதனால் கடந்த முறை நழுவி சென்ற வாய்பை இந்த முறை பயன்படுத்தி கொள்ள அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது.

மேலும் தற்போது தமிழக அரசியலில் திமுகவிற்கு பிராதனமான எதிர்க்கட்சியாக அதிமுக உள்ளது, ஆனால் எடப்பாடி தலைமையின் மேல் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு மிகப்பெரிய கேள்வி உள்ளது. அதிமுகவில் முன்பு இருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைமை தற்போது இல்லை என்பது எதார்த்தமான உண்மை.

ஏற்கனவே அதிமுக பல அணிகளாக உடைந்துள்ளது, தற்போது இந்த சூழலை சரியாக பயன்படுத்தி கொண்டால் வரும் காலத்தில் தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய கட்சியாக உருவெடுத்துவிடலாம் என்ற நோக்கத்துடன் பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதாக அரசியல் வட்டராங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன.

தமிழ்நாட்டை அதிக முறை ஆட்சி செய்த கட்சி என்ற பெருமையுடன் அதிமுக வளம் வந்தது, ஆனால் தற்போது ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நடைபெற்ற 10 தேர்தலிலும் தோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக 2024-ல் நடைபெற்ற பொத்தேர்தலில் மிக மோசமான தோல்வியை சந்தித்தது, அந்த தேர்தலில் பல இடங்களில் இரண்டாவது இடம் கூட கிடைக்காமல் போனதால் அதிமுக தொண்டர்கள் வேதணையில் உள்ளனர்.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஒரு புறம் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் வலிமையாக உள்ளது மறுபுறம் பாஜகவின் வளர்ச்சி, விஜய்யின் புதிய கட்சி என கடும் போட்டி சூழலில் அதிமுக தற்போது உள்ளது. 

இருப்பினும் அதிமுகவிற்கு இன்றளவும் தனக்கென தனி வாக்கு வங்கியுடன் இருக்கிறது. ஒருபுறம் பாஜகவுடனான கூட்டணியை விமர்ச்சித்தாலும் மறுபுறம் இந்த முடிவை வரவேற்கிறார்கள் . ஏனென்றால் விஜய்யின் தவெகவுடன் அதிமுக கூட்டணி வைக்கப்போவதாக ஒரு சூழல் நிலவியது. முதல் தேர்தலை சந்திக்கும் விஜயுடன் அதிமுக கூட்டணி வைத்து தோற்றுவிற்றால் தனக்கு இருந்த இறுதி வாய்ப்பை நழுவ விட்ட நிலைமையாக மாறிவிடும். அதானால் பாஜகவுடன் கூட்டணி வைத்தது சரியே என கருதுகின்றனர். 

திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியினர் கொள்கையில் எந்தவிதமான சமரசமும் செய்யாமல் இருக்கின்றனர். அதுபோல தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் அதிமுகவும் கொள்கையில் எந்த சமரசமும் செய்யாமல் பயணிக்கும். மேலும் இது அரசியல் ரீதியான கூட்டணி மட்டுமே என அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை கூறியுள்ளார்.

இருப்பினும் நீட் தேர்வு, நிதி பகிர்வு,தொகுதி மறுவரை என பல்வேறு முறைகளில் இன்றளவும் தமிழ்நாட்டு மக்கள் பாஜகவின் மீது முரண்பட்டு உள்ளனர். இந்த நிலையில் பாஜகவுடன் கூட்டணி வைத்தது அதிமுகவை பலவீனப்படுத்துமா என்ற கேள்வி எழ தான் செய்கிறது….

அதிமுக-பாஜக கூட்டணி மீண்டும் உருவாகியிருப்பது தமிழக அரசியலில் ஒரு புதிய பரிணாமமாகும். கடந்த காலங்களை பொறுத்தவரை, இந்த கூட்டணியில் இருவருக்கும் வெற்றிகளும், தோல்விகளும் சமமாகவே வந்துள்ளன.ஆனால் இப்போது சூழ்நிலை முற்றிலும் மாறியுள்ளது.

  • பாஜக – தேசிய அளவில் வலிமையான கட்சி, ஆனால் தமிழகத்தில் தற்போது தான் வளர்ச்சி பாதையில் இருக்கிறது. அதிமுகவின் வாக்கு வங்கி இல்லாமல் பாஜகவால் தனிப்பெரும்பாண்மையை ஏற்படுத்த முடியாத சூழலில் பாஜக உள்ளது.

  • அதிமுக – வரிசையாக 10 தேர்தல்களில் தோல்வி அடைந்த நிலையில், தன்னை மீண்டும் நிலைநிறுத்த வேண்டிய கட்டாய தேவையில் உள்ளது. மேலும் தனிப்பெரும்பாண்மை மூலம் ஆட்சி அமைக்க முடியாத சூழல் நிலவுவதால்  பாஜகவுடன் கூட்டணி அதிமுகவிற்கு அவசியமாகிறது.

இரு கட்சிகளும் கூட்டணியில் இணைவது தனித் தனி இலக்குகளை அடைய உதவும் ஒரு விளக்கமான வியூகம் ஆகும். ஆனால் இது நிரந்தர வெற்றி தருமா என்ற கேள்விக்கு காலம் தான் பதில் கூறும்.

அதிமுகவுக்கு தற்போது இது ஒரு “வெற்றி இல்லாத காலத்தை முடிக்க ஒரு கடைசி வாய்ப்பு”, பாஜகக்கு இது “தமிழகத்தில் பாதை அமைக்கும் முக்கிய கட்டம்”.ஆகும்.