
ஜூன் 12 அன்று குஜராத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா AI171 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அகமதாபாத் மேகானி நகர் பகுதியில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரி குடியிருப்பு வளாகத்தில் மோதியது. இந்தக் குடியிருப்பில் பயிற்சி மருத்துவர்களும், மருத்துவமனை ஊழியர்களும் வசித்து வந்தனர்.
விமானத்தில் பயணித்த 241 பேருடன், குடியிருப்பில் இருந்த மருத்துவ மாணவர்கள் மற்றும் ஊழியர்களும் பலரும் இந்த விபத்தில் பலியாகியுள்ளனர்.
தீவிபத்தில் கருகிய உடல்களை அடையாளம் காண டி.என்.ஏ. பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த சோகமான நிகழ்வில் ரவி என்ற இளைஞர் தனது தாயாரும், இரண்டு வயதான மகளும் காணாமல் போயுள்ளதாகக் கூறி கதறியுள்ளார். ரவியின் தாயார் ஷர்லபென் தாக்கூர், பிஜே மருத்துவமனையில் உணவு தயாரிப்பு பணி செய்து வந்துள்ளார். விமானம் மோதிய நேரத்தில் ரவி வேறொரு இடத்தில் உணவு விநியோகிக்க சென்றிருந்தார். ,அவர்கள் நிலை குறித்து எந்தத் தகவலும் இல்லாததால் மனவேதனையில் இருப்பதாகவும் கூறினார்.
ரவி கூறுகையில்:
“ஜூன் 12 ஒரு சாதாரண வேலை நாளாகவே இருந்தது. மதியம் 1 மணிக்கு உணவு விநியோகிக்க சென்றேன். திரும்பி வந்தபோது விபத்தைப் பற்றி தெரிந்தது. என் அம்மா அமர்ந்திருந்த இடமே கருகிப் போனது. என் மகளும் அவருடன் இருந்தார். அவர்கள் இருவரையும் தேடிக் கொண்டே இருக்கிறோம். எங்களுக்குள் ஏதாவது ஒரு ஆளாவது மீண்டு வந்தாலே போதும்…”
அத்துடன், காவல் துறையினர் மற்றும் மீட்பு குழுக்கள் தொடர்ந்து அவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன. DNA மாதிரிகள் மூலம் உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.