
வக்ஃப் (திருத்த) மசோதா 2025, காரசாரமான விவாதத்திற்குப் பிறகு நள்ளிரவில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்குகளும், எதிராக 232 வாக்குகளும் பதிவாகின. இதையெடுத்து மாநிலங்களவையில் மசோதா மீதான விவாதம் நடைபெறும்.
பெரும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு வக்ஃப் திருத்த மசோதாவை (02/03/25)நண்பகல் 1மணி அளவில் மக்களவையில் தாக்கல் செய்தார். மசோதா மீது விவாதம் நடத்த இரு அவைகளிலும் 8 மணி நேரம் ஒதுக்கப்படும்,தேவைப்படும் பட்சத்தில் நேரம் நீட்டிக்கப்படும் என முன்னதாகவே அறிவிக்கப்பட்டது.
மசோதாவை அறிமுகப்படுத்தி பேசிய அமைச்சர் கிரண் ரிஜிஜு “இந்த சட்டத்திற்கும் மதத்திற்கும் எந்த சம்மதமில்லை, இது வக்ஃப் சொத்துக்களை நிர்வகிப்பதற்காவே உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் வக்ஃப் சொத்துகளின் செயல்பாட்டை மேம்படுத்துதல், சிக்கல்களை சரிசெய்தல்,வெளிப்படைத்தன்மையை உறுது செய்தல் மற்றும் தொழில் நுட்பம் சார்ந்த நிர்வாகத்தை அறிமுகப்படுத்துதல் ஆகியவற்றையே மசோதா நோக்கமாக கொண்டுள்ளது.
அதிகாரிகள், பொதுச் சமூகம் மற்றும் மத நிறுவனங்கள் என பல்வேறு தரப்பினரும் இந்த மசோதா குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் தங்கள் கருத்துகளை முன்வைத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் “இந்த மசோதாவின் மூலம், அரசு எந்தவொரு மதம் சார்ந்த நிறுவனம் மீதோ அல்லது மத செயல்பாடுகளின் மீதோ தலையிடாது. வக்ஃப் வாரியம் எந்தவொரு மத நிறுவனத்தின் நிர்வாகத்திலும் தலையிடாது.” என கூறினார்.
எதிர்க்கட்சியினர் இந்த மசோதாவை அரசியல் அமைப்பை நீர்த்துப்போகச் செய்யும் செயல் என விமர்சித்தனர்.
இந்த மசோத குறித்த பேசிய திமுக எம்பி ஆ.ராசா ”நீங்கள் இன்று(கிரண் ரிஜிஜு) பேசியதை நாளை எழுத்துபூர்வமாக தொகுத்து, அதை நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் அறிக்கையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். இரண்டும் சரியாக இருந்தால், நான் இந்த அவையிலிருந்து ராஜினாமா செய்கிறேன் என சவால் விடுத்தார்”.
இந்த சட்ட மசோதா அரசியலமைப்பு சட்டத்துக்கும் மத சுதந்திரம், மற்றும் சிறுபான்மையினர் நலனுக்கு எதிரானது என்றும் அவர் கூறினார்.
சமாஜ்வாதி எம்.பி. அகிலேஷ் யாதவ், “தனது தோல்வியை மறைக்கும் போதெல்லாம், பாஜக சட்டத் திருத்தத்தைக் கொண்டு வருகிறது. முஸ்லிம் சகோதரர்களின் நிலங்களை கணக்கெடுப்பது குறித்து பாஜக பேசுவதன் மூலம், மகா கும்பமேளாவில் இந்துக்கள் இறந்ததை மூடி மறைக்க பார்க்கிறது,” என குற்றம் சாட்டினார்.
வக்ஃப் திருத்த மசோதா பற்றிய எதிர்க்கட்சியினரின் எதிர்ப்புகள் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளித்தார்.
“இந்த மசோதா குறித்து அறியாமலோ அல்லது அரசியல் காரணங்களுக்காகவோ எதிர்க்கட்சி உறுப்பினர்களின் மனதில் தவறான புரிதல்கள் உள்ளன, நாடாளுமன்றம் மூலமாக இதுகுறித்து நாடு முழுவதும் தவறான புரிதல்களை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.
“முஸ்லிம் அல்லாத யாரும் வக்ஃப் வாரியத்துக்குள் வர மாட்டார்கள். இதை தெளிவாக புரிந்துகொள்ளுங்கள். எந்தவொரு முத்தவல்லியோ (வக்ஃப் சொத்துக்களை நிர்வகிப்பவர்கள்), வக்ஃப் வாரியத்தில் உள்ளவர்களோ முஸ்லிம் அல்லாதவர்களாக இருக்க மாட்டார்கள்.” என தெரிவித்தார்.
காரசாரமக நடந்த இந்த விவாதம் நள்ளிரவு வரை நீடித்தது, அதையெடுத்து பல சுற்று வாக்கெடுப்புக்கு பிறகு 232 வாக்குகள் மசோதாவிற்கு எதிராகவும், 288 வாக்குகள் ஆதரவாகவும் பதிவானதால் மக்களவையில் வக்ஃப் திருத்த மசோத 2025 மற்றும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முசல்மான் வக்ஃப் (ரத்து) மசோதா 2024, ஆகிய இரண்டும் அதிகாலை 1:57 மணியளவில் நிறைவேற்றப்பட்டது. வக்ஃப் மசோதா மக்களைவையில் நிறைவேறியிருந்தாலும், மாநிலங்களவையிலும் இதன் மீது விவாதம் நடைபெறும் , இந்த அவையில் மசோதா நிறைவேற்றப்பட்டால் தான் வக்ஃப் திருத்த மசோதா சட்டமாக அமலுக்கு வரும்.