கோகைன் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது : புழல் சிறையில் அடைப்பு!

“Tamil actor Srikanth being taken into police custody after a raid uncovered cocaine at his residence in Chennai.”


சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மதுபானக் கூடத்தில் கடந்த மாதம் 22ஆம் தேதி நடைபெற்ற மோதலில் ஓய்வு பெற்ற டிஎஸ்பி ஒருவரின் மகன் மற்றும் முன்னாள் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியிலிருந்த பிரசாத் ஆகியோருக்கிடையே ஏற்பட்ட மோதலின் பின்னணியில் நிகழ்ந்த விசாரணை, தற்போது பெரும் போதைப்பொருள் வழக்காக மாறியுள்ளது.

அந்த மோதலில் பிரசாதுடன் இருந்த தொழில் அதிபர்கள் பீர் பாட்டிலை உடைத்து ரகளையில் ஈடுபட்டு, டிஎஸ்பி மகனை தாக்கியதாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பிரசாத், தூண்டில் ராஜா மற்றும் அஜய் ரோகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களின் செல்போன் விவரங்களை ஆய்வு செய்த போலீசார், கொகைன் போதைப்பொருள் விற்பனைக் கும்பலுடன் தொடர்புகள் இருப்பதை கண்டறிந்தனர்.

இது வழியாக விசாரணை நடத்தப்பட்டதில், சங்ககிரியைச் சேர்ந்த பிரதீப்குமார் என்ற நபர், பிரசாதுக்கு தொடர்ச்சியாக கொகைன் விநியோகம் செய்திருப்பது தெரியவந்தது. முக்கியமாக, இவர் மட்டும் அல்லாமல் மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஜான், பெங்களூரில் வசிக்கும் நைஜீரிய கும்பல் ஆகியோர் இந்த விடயத்தில் தொடர்புடையவர்களாக  மாறயுள்ளனர்

பின்னர் பிரதீப்குமாரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கொகைன் வாங்கியவர்களில் நடிகர் ஸ்ரீகாந்த் முக்கியமானவராக இருப்பது உறுதியானது. ரூ.13 ஆயிரம் விலையில் ஒரு கிராம் கொகைனை வாங்கியதாகவும், ஸ்ரீகாந்த் பிரசாத்  மூலமாக  பிரதீப் குமாருக்கு அறிமுகமாகியுள்ளதும் தெரியவந்தது.

இதையடுத்து , கொகைன் வழக்கில் ஸ்ரீகாந்தின் பெயர் உறுதியாகியதையடுத்து, அவருக்கு சம்மன் அனுப்பி நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு கூறப்பட்டது.

 விசாரணை போது அவர் தொடக்கத்தில் மறுத்தாலும், இரத்த பரிசோதனையில் கொகைன் மற்றும் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பயன்படுத்தியதை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்பின் ஸ்ரீகாந்திடம் 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் கொகைன் விற்பனைக்கும்பலுடன் தொடர்பு இருப்பதையும், தனது தேவைக்கு மட்டுமல்லாமல் திரையுலக பிரபலர்களுக்கும் கொடுத்திருப்பதாக தெரிவித்துள்ளதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதன் அடிப்படையில், போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த், ஜூலை 7ஆம் தேதி வரை 15 நாள் நீதிமன்ற காவலில் அனுப்பப்பட்டுள்ளார்.

விசாரணையின் அடுத்த கட்டமாக, அவரை காவலில் எடுத்து திரையுலகத்தில் அவர் யாருக்கு யாருக்கு கொகைன் வழங்கியுள்ளார் என்பது உள்ளிட்ட முக்கிய கோணங்களில் தீவிர விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதில் நடிகர் கிருஷ்ணா உள்பட பலரும் சிக்கக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.