
உளுந்தூர்பேட்டை அரசு போக்குவரத்து பணிமனையில் 65-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கத்திற்காக நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல் பழுது ஏற்பட்ட காரணத்தால் 50-க்கும் மேற்பட்ட பஸ்கள் பயன்பாடு இன்றி நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இன்று காலை கடலூருக்கு செல்லவிருந்த அரசு பஸ்சின் என்ஜின் பகுதியில் திடீரென தீப்பொறி ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் சில நிமிடங்களில் தீ வேகமாக பரவி பஸ் முழுவதும் எரிந்ததுள்ளது.
இதனை பார்த்த பணிமனை ஊழியர்கள் உடனே உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். அதன்படி அலுவலர் ரமேஷ் தலைமையிலான குழுவினர் விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சி தீயை கட்டுப்படுத்தினர்.
இந்த தீ விபத்தில் அந்த பஸ் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக மற்ற பஸ்கள் மற்றும் பணிமனை வளாகம் பாதிக்கப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.