ஐஐடி சென்னையில் இடம் பெற்ற பழங்குடியின மாணவி ராஜேஸ்வரி!

Tribal girl Rajeshwari earns admission to IIT Chennai, breaking barriers

சேலம் மாவட்டம் கல்வராயன்மலை அருகே உள்ள கருமந்துறை கிராமத்தைச் சேர்ந்த ஆண்டி மற்றும் கவிதா தம்பதியர்களுக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர்.

ஆண்டி டெய்லர் வேலை செய்து பிள்ளைகளை கல்வியில் முன்னேற்ற வேண்டும் என்ற கனவுடன் பாடுபட்டார் அவர் கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால்  உயிரிழந்துள்ளார். அதன் பின்னர், பட்டதாரியான மகன் ஸ்ரீ கணேஷ் தந்தையின் டெய்லர் வேலையைச் செய்து  குடும்பத்தைக் காப்பாற்றி வந்துள்ளார்.

இந்த குடும்பத்தின் இளைய மகளான ராஜேஸ்வரி, அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் கல்வி கற்று, பத்தாம் வகுப்பில் 438 மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் 521 மதிப்பெண்கள் பெற்று  அசத்தியுள்ளார்.

பொறியியல் படிப்பு படிக்க விருப்பம் கொண்ட அவர், பெருந்துறை அரசு பயிற்சி மையத்தில் பயின்று ஜே.இ.இ தேர்வு எழுதினார். அந்தத் தேர்வில் அகில இந்திய அளவில் 417வது இடத்தைப் பிடித்து பெரும் சாதனை செய்துள்ளார்.

இதன் அடிப்படையில், ராஜேஸ்வரி சென்னை ஐஐடியில் இடம் பெற்று பழங்குடியின சமூகத்திலிருந்து அந்த உயரிய கல்வி நிறுவனத்தில் சேரும் முதல் பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இந்த சாதனை பலரிடையே பெரும் பாராட்டுகளை பெற்றுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கான தனது வாழ்த்துப் பதிவில், “தந்தையை இழந்தாலும், அவர் கனவை நனவாக்கிய மாணவி ராஜேஸ்வரியின் சாதனைக்கு என் சல்யூட். அவரின் உயர்கல்வி செலவுகளை அரசே முழுமையாக ஏற்கும்” என்று தெரிவித்தார்.