
தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில், 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு “கல்வி விருது” வழங்கும் விழா கடந்த மே 30 மற்றும் ஜூன் 4ம் தேதிகளில் மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகரும் அரசியல் தலைவருமான விஜய் நேரில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.
இந்நிகழ்வின் போது சில மாணவர்கள் விஜய்யுடன் உருக்கமான தருணங்களை பகிர்ந்தனர். அவரை “அண்ணா” என அழைத்து, பூக்கள் கொடுத்து, சிலர் கட்டி அணைத்தும் தங்களது நன்றி உணர்வுகளை வெளிப்படுத்தினர். இக்காட்சிகள் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு பேசபொருளாக மாறியிருந்தது
ஆனால், இந்த நிகழ்வை விமர்சிக்கும் விதத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின.
விஜய்யின் நிகழ்ச்சியில் மாணவர்கள் நடத்தையை அவமதிக்கும் வகையில் பேசியதாக அவர் மீது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், தமிழிசை சவுந்தரராஜன் வேல்முருகனின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் வேல்முருகன் அவர்களே உங்கள் கொச்சையான பேச்சை கண்டிக்கிறேன்….. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தம்பி விஜய் அவர்கள் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஊக்கம் தரும் அளவிற்கு ஒரு நிகழ்ச்சி நடத்துகிறார் சில நேரங்களில் அதில் அவர் பேசிய அரசியல் கருத்துக்களில் கூட எனக்கு மாறுபாடு உண்டு.
ஆனால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியரை அதிகம் சந்தித்து அவர்களின் அறிவுத்தாகத்தை அறிந்தவள் என்ற வகையில் அவர்களுக்கு ஊக்கம் அளிப்பதை நான் வரவேற்கிறேன் தமிழ் அழகானது உங்கள் மனது தான் அழுக்கானது குழந்தைகள் அவரை அண்ணா என்று அழைப்பது தமிழில் அன்பின் வெளிப்பாடு மட்டுமே இது அரசியலுக்கு அப்பாற்பட்ட அழைப்பு ஆனால் அந்த உறவை கொச்சைப்படுத்துவது அந்த குழந்தைகளின் மனதை புண்படுத்துவது மட்டுமல்லாமல் அவர்களுக்கு ஆதரவளிக்கும் பெற்றோர்களின் மனதையும் புண்படுத்துவது ஆகும் தாங்கள் இவ்வாறு புண்படுத்துவது தமிழ் பண்பாடும் இல்லை மனித நேயமும் அல்ல .திருவேல் முருகன் அவர்களின் கொச்சைப் பேச்சை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.