
இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகளின் ஏ.டி.எம். எந்திரங்களில் தற்போது ரூ.500 மதிப்புள்ள நோட்டுகள் மட்டுமே பெற்றுக்கொள்ள கூடிய நிலைமை காணப்படுகின்றது . இதனால், வாடிக்கையாளர்கள் சிறிய தொகைகளை எடுத்துக்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக ஏழை மற்றும் குறைந்த வருமானம் கொண்டவர்கள் தங்களது கணக்கில் உள்ள சிறிய தொகையை பெற்றுக்கொள்ள முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக, ரிசர்வ் வங்கிக்கு பல்வேறு புகார்கள் சென்றுள்ளதைத் தொடர்ந்து, ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் மற்றும் ஏ.டி.எம். இயக்குநர்களுக்கும் புதிய சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில், வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் குறைந்தது 75 சதவீத ஏ.டி.எம்.களில் ஒரு கேசெட்டில் ரூ.100 அல்லது ரூ.200 மதிப்புள்ள நோட்டுகளை கட்டாயம் வைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும், 2026ஆம் ஆண்டின் மார்ச் 31ஆம் தேதிக்குள் இந்த வீதத்தை 90 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போதைய ஏ.டி.எம். எந்திரங்களில் ரூ.100, ரூ.200, ரூ.500 மற்றும் புழக்கத்தில் இல்லாத ரூ.2000 ஆகிய நான்கு வகை நோட்டுகளுக்கான கேசெட்டுகள் உள்ளன.
எனினும், ரூ.500 நோட்டுகள் மட்டுமே பெரும்பாலும் வைக்கப்படுவதால், மற்ற நோட்டுகளுக்கான கேசெட்டுகள் வெறுமையாகவே இருக்கின்றன.
இந்த நிலையை மாற்றும் வகையில், வாடிக்கையாளர்களின் இன்னல்களை தீர்க்கும் நோக்கில் இந்த புதிய உத்தரவை ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ளது.