
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம், தமிழகமெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்தக் கொடூரச் சம்பவத்தில் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு, ஜூன் 2ஆம் தேதி சென்னை மகளிர் நீதிமன்றம் 30 ஆண்டுகள் குறையாத கடும் சிறை தண்டனையை விதித்தது தீர்பழித்துள்ளது .
இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வரும் சூழலில் இந்த வழக்கில் மேலும் குற்றவாளிகள் இருப்பதாகவும் அதை திமுக அரசு திட்டமிட்டு மறைத்து உள்ளதாகவும் அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்
இந்த நிலையில், அரசு தரப்பை பிரதிநிதித்துவப்படுத்திய வழக்கறிஞர் மேரி ஜெயந்தி செய்தியாளர்களை சந்தித்து, வழக்கின் விசாரணைகள் மற்றும் தீர்ப்பு தொடர்பான விளக்கங்களை வழங்கினார்.
ஞானசேகரன் மட்டுமே இந்த வழக்கில் ஒரே குற்றவாளி என நீதிமன்றம் தெளிவாக உறுதி செய்துள்ளதாக கூறியுள்ளார்.
சம்பவம் நடைபெற்ற நேரத்தில் ஞானசேகரனின் செல்போன் ப்ளைட் மோடில் தான் இருந்துள்ளதையும் அது தொடர்பான தகவலை ஏர்டெல் மண்டல மேலாளர் நேரில் வந்து நீதிமன்றத்தில் சாட்சி அளித்ததையும், அந்த நேரத்தில் ஞானசேகரன் மாணவியை பயமுறுத்துவதற்காக தான் யாரிடமோ பேசுவது போல நடித்து இருந்ததும் நிரூபிக்கப்பட்டது என தெரிவித்தார்.
மாணவியிடம் நடைபெற்ற விசாரணையின் போது, எந்த ஒரு ரிங் டோனும் கேட்கப்படவில்லை என அவரும் தெரிவித்ததையடுத்து, இது குற்றவாளியின் திட்டமிட்ட செயல் தான் என்பது நிரூபிக்கபட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், இந்த வழக்கில் வேறு யாருடைய தொடர்பும் இல்லை என்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளதால், இனிமேலும் ” யார் அந்த சார் ” என தொடர்ந்து வேறு நபர்கள் குறித்துப் பேசுவது நீதிமன்ற அவமதிப்பு ஆகும் என்றும் தெரிவித்துள்ளார்
மேலும், பெண்கள் தன்னம்பிக்கையுடன், பயமின்றி, அநீதிக்கு எதிராக புகார்கள் அளிக்க முன்வர வேண்டும் என்ற உறுதியையும் அவர் வழங்கியுள்ளார்