புகைபிடிப்பதற்கான குறைந்தபட்ச வயதை 21 ஆக உயர்த்த வேண்டும்  – அன்புமணி ராமதாஸ்

"Anbumani Ramadoss urges to raise the legal smoking age to 21."

கர்நாடக அரசு, புகையிலைப் பொருட்களை  பயன்படுத்துவதற்கான  குறைந்தபட்ச வயதை 21 ஆக உயர்த்தி அதற்கான சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதைப் பாராட்டிய பா.ம.க தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், தமிழகம் இதுபோன்ற முன்னேற்றமான நடவடிக்கைகளை எடுக்காததை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் கர்நாடக அரசு இயற்றியுள்ள இந்தச் சட்டம் வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் முன்னோடி மாநிலம் என்று கூறிக்கொள்ளும் தமிழகம், பல நூறு முறை வலியுறுத்தியும் கூட இத்தகைய சட்டங்களை இயற்ற மறுத்து வருவது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார் 

இந்தியாவில் ஆண்டுதோறும் 13 லட்சம் பேர் புகைப்பழக்கத்தால்  உயிரிழக்கின்றனர் எனும் புள்ளிவிவரத்தை குறிப்பிட்ட அவர், “புகைபிடிப்பது  பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. எனவே  அதற்கேற்ற  வகையில் தமிழக அரசு கூடுதலான கட்டுப்பாடுகள் மேற்கொள்ள வேண்டும்,” என வலியுறுத்தினார்.

புகைப் பிடிக்கக் கூடிய வயதை 21 ஆக உயர்த்தும் தேசிய சட்டம் 2021 இல் தயாரிக்கப்பட்டிருந்தாலும் , இன்னும் நடைமுறைக்கு வராததை சுட்டிக்காட்டியுள்ளார் .

இந்த சிக்கல்களுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் , புகைபிடிப்பதற்கான குறைந்தபட்ச வயதை 21 ஆக உயர்த்தும் சட்டத்தை மத்திய அரசும், தமிழக அரசும் உடனடியாக கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.அத்துடன் இந்த வரம்பை ஆண்டுக்கு ஒரு வயது வீதம் உயர்த்துவதன் மூலம் இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா, குறிப்பாக தமிழ்நாட்டை புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்