கர்நாடகா அரசின் ஒப்பந்தங்களில் சிறுபான்மையருக்கு 4% இட ஒதுக்கீடு விவாதமாவது ஏன் !?

Why is Karnataka Government’s 4% Quota for Minorities in Contracts a Debate

கர்நாடகா அரசின் ஒப்பந்தங்களில் சிறுபான்மையருக்கு 4% இட ஒதுக்கீடு விவாதமாவது ஏன் ??

எதிர்க்கட்சியான பாஜக இதைப் பற்றி கூறுவது என்ன?

ஏற்கனவே அரசின் ஒப்பந்தங்களில் சிறுபான்மையினர் பெறும் சதவீதம் எவ்வளவு?

ரூ1 கோடி வரையிலான கர்நாடக அரசு ஒப்பந்தங்களில் சிறுபான்மையினருக்கு 4% இட ஒதுக்கீடு தொடர்பான மாநில அரசின் அறிவிப்புக்கு எதிர்க்கட்சியான பா.ஜ.க. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. “மத அடிப்படையிலான இடஒதுக்கீடு” வழங்குவது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும் குற்றம் சாட்டியுள்ளது.

மார்ச் 07 அன்று  பட்ஜெட் கூட்டத் தொடரில் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு அரசு ஒப்பந்த பணிகளில் 4% இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து மார்ச் 16ம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சிறுபான்மையினருக்கு புதிய இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் கே.டி.பி.பி., எனப்படும் கர்நாடகா பொது கொள்முதல் வெளிப்படைத்தன்மை சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

புதிய இட ஒதுக்கீடு என்றால் என்ன ?

பட்டியல் சாதியினர் (SC), பட்டியல் பழங்குடியினர் (ST) மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஆகியோரைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கிய 4% இடஒதுக்கீட்டுடன் கூடுதலாக இந்த 4% இடஒதுக்கீடு வழங்க இந்த சட்டம் வழிவக்கும் .

எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவு, பிரிவு 1, பிரிவு 2ஏ, பிரிவு 2பி என, அனைத்து பிரிவுகளிலும்,1கோடி ரூபாய் வரையிலான பணிகளில், சிறுபான்மையினருக்கு 4% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என, புதிய சட்டத்திருத்தம் கூறுகிறது. இதில், பிரிவு 2பி என்பது முஸ்லீம்களுக்கானது.

அரசு ஒப்பந்தங்களில் தற்போதயை  ஒதுக்கீடு

​​கர்நாடகாவில் சிவில் பணி ஒப்பந்தங்களில் பட்டியல் சாதியினர் (SC) மற்றும் பட்டியல் பழங்குடியினர் (ST) ஆகியோருக்கு 24%, இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) பிரிவு-1 க்கு 4% மற்றும் பிரிவு-2A இல் உள்ள OBC களுக்கு 15% ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடஒதுக்கீடுகள் மொத்த ஒப்பந்தங்களில் 43% ஆகும். தற்போது முன்மொழியப்பட்ட 4% முஸ்லிம் ஒதுக்கீடு பிரிவு-2B இன் கீழ் செயல்படுத்தப்பட்டால், அரசு ஒப்பந்தங்களில் ஒட்டுமொத்த இடஒதுக்கீடு 47% ஆக அதிகரிக்கும், ஒப்பந்த உச்சவரம்பு ரூ.2 கோடியாக இரட்டிப்பாக்கப்படும்.

மசோதா தாக்கல்

இந்நிலையில் இந்த சட்ட திருத்த மசோதாவை கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல்,  ‘கர்நாடக பொது கொள்முதல் (திருத்தம்) மசோதா 2025 என்ற பெயரில் சட்டப்பேரவையில் 18?03/2025 அன்று தாக்கல் செய்தார். அப்போது  அவர் பேசுகையில் “கர்நாடகாவில் சிறுபான்மையின மக்கள் கல்வி,வேலை வாய்ப்பு,பொருளாதரம் உள்ளிட்ட பிரிவுகளில் பிந்தங்கியுள்ளனர், இந்த சட்டத் திருத்ததின் மூலம் சிறுபான்மையினரிடயே நிலவும் வேலையின்மை, பொருளாதார பின்னடைவு ஆகியவற்றை நிவர்த்தி செய்ய முடியும். மேலும் 1999ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கர்நாடக பொது கொள்முதல் சட்டத்தை திருத்த தேவை எழுந்துள்ளது என கூறினார்”.

பாஜக-வின் நிலைப்பாடு

மாநில அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சியான பாஜக கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து பேசிய பாஜக எம்பியும் அக்கட்சியின் இளைஞர் அணி தலைவருமான தேஜஸ்வி சூர்யா, ”முஸ்லிம் வாக்கு வங்கியை குறிவைத்து கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் அரசு இந்த இட ஒதுக்கீட்டை கொண்டுவந்துள்ளது. தேர்தல் அரசியலுக்காக காங்கிரஸ் போடும் நாடகத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. பாபாசாகேப் அம்பேத்கர் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ஒருபோதும் ஏற்க முடியாது என கூறியுள்ளார்.

இந்த மசோதாவை எதிர்த்து சட்டப்பேரவைக்கு, உள்ளேயும், வெளியேயும் பாஜக போராடும். உச்ச நீதிமன்றத்திலும் இதற்கு எதிராக வழக்கு தொடர்வோம். கர்நாடகாவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்கு எதிராக போராட்டம் நடத்துவோம். கர்நாடக அரசின் சட்ட திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் தோற்கடிப்போம்”என்றார்.

டி.கே. சிவக்குமார் பதிலடி

பா.ஜ.க பிரிவினைவாத அரசியலை பின்பற்றுவதாக குற்றஞ்சாட்டிய கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் அரசின் நடவடிக்கையை ஆதரித்தார்.”இஸ்லாமியர்களாக இருந்தாலும் சரி, கிறிஸ்தவர்களாக இருந்தாலும் சரி, சீக்கியர்களாக இருந்தாலும் சரி, பௌத்தர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் அனைவரும் நம் நாட்டின் குடிமக்கள். அனைத்து சிறுபான்மையினர் மற்றும் பின்தங்கிய சமூகங்களைப் பற்றியும் நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம்,” என்று அவர் கூறினார். பா.ஜ.க.-வை கடுமையாக சாடிய சிவகுமார், ஒற்றுமை பற்றி பேசுபவர்கள் கிறிஸ்தவ அல்லது முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை ராஜ்யசபா எம்.பி அல்லது மத்திய அமைச்சராக்க வேண்டும் என்றார். “அவர்கள் அவ்வாறு செய்யும்போது, ​​அனைவருக்கும் சம வாய்ப்பு பற்றி பேச உரிமை இருக்கும்,” என்று அவர் கூறினார். இஸ்லாமியர்களுக்கு மட்டுமே 4% இடஒதுக்கீடு தரவில்லை; அனைத்து சிறுபான்மையினருக்கும்தான் 4% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது என அவர் விளக்கம் அளித்துள்ளார்.