ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் குறையாத  ஆயுள் தண்டனை! 

"Gnanasekaran sentenced to life imprisonment without the possibility of remission for 30 years."

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்தக் கொடூர சம்பவம் தமிழகமெங்கும் பெரும் அதிர்வலைத்தைக் கிளப்பியது. அதனடிப்படையில் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் மூன்று பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரித்தது. தொடர்ந்து பிப்ரவரி 24ஆம் தேதி சைதாப்பேட்டை 9ஆம் நீதிமன்றத்தில் 100 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில் ஞானசேகரன் ஒருவரே பிரதிநாயகனாக குற்றஞ்சாட்டப்பட்டார்.

மார்ச் 7ஆம் தேதி வழக்கை மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றியதை அடுத்து, ஞானசேகரன் தன்னை விடுதலை செய்யக்கோரிய மனு தாக்கல் செய்தார். ஆனால் அது ஏப்ரல் 8ஆம் தேதி நிராகரிக்கப்பட்டது. அதன் பின்னர், ஏப்ரல் 23ஆம் தேதி தொடங்கிய சாட்சி விசாரணையில் காவல்துறை சார்பில் 29 பேர் நேரில் ஆஜராகினர். சுமார் 75 சான்றுகளும் தாக்கல் செய்யப்பட்டது.

இருதரப்பின் இறுதி வாதங்களைத் தொடர்ந்து, மே 28ஆம் தேதி குற்றவாளி ஞானசேகரன் மீது 11 பிரிவுகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டது. இன்று (ஜூன் 2) வெளியான தீர்ப்பில், குற்றவாளிக்கு 30 ஆண்டுக்கு குறையாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.90,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, சிறையில் நன்னடத்தை அடிப்படையில் தண்டனைக்காலம் குறைக்கப்படும் வாய்ப்பு இருந்தாலும், இந்த வழக்கில் நீதிமன்றம் கடுமையான அணுகுமுறையுடன், குற்றவாளி 30 ஆண்டுகள் முற்றிலும் சிறையிலேயே தண்டனை அனுபவிக்க வேண்டும் எனத் தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பு, பாலியல் குற்றங்களில் குற்றவாளிகளுக்கு எதிராக எடுத்த கடுமையான சட்ட நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தையும், சட்டத்தின் ஒழுங்குமுறைகளின் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்