
சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பை மத்திய அரசு விரிவாக நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாகும் என அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாட்டு எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார். இது சமுதாய நீதிக்கான ஒரு உறுதியான அடித்தள நடவடிக்கையாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“இந்த முடிவு ஒரே இரவில் எடுக்கப்பட்டதல்ல. இதற்கான கோரிக்கையை அதிமுக பல ஆண்டுகளாக தெளிவாகவும் தொடர்ச்சியாகவும் முன்வைத்து வந்துள்ளது. இது தமிழகத்தில் ஏற்பட்ட சமூகநீதி இயக்கத்திலிருந்து வந்த ஒரு பரிணாமம்,” என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்
2021 ஆம் ஆண்டு தாம் முதல்வராக இருந்தபோது, தமிழகம் சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பை நடத்த வேண்டியதற்கான முடிவை முதலில் எடுத்த மாநிலங்களில் ஒன்றாக இருந்ததாக அவர் நினைவூட்டினார். “1931 ஆம் ஆண்டு பிற்பட்ட தரவுகளை வைத்து நலத்திட்டங்களை வகுக்க முடியாது. முன்னேற்றம் என்பது அனுதாபத்தின் மூலம் அல்ல, ஆதாரங்களின் மூலம் மட்டுமே சாத்தியம்,” என அவர் வலியுறுத்தினார்.
மேலம் அதிமுகவின் 69% இடஒதுக்கீடு கொள்கையை 1993 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் தீர்மானித்து, அரசியலமைப்பின் 9ஆம் அட்டவணையில் கொண்டுவந்து பாதுகாப்பதற்கான முயற்சிகள் ஜெயலலிதாவின் தலைமைத்துவத்தின் சான்றுகள் என குறிப்பட்ட அவர் தற்போது திமுக சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பை ஆதரிப்பது உண்மையான கொள்கை நிலைப்பாட்டின் வெளிப்பாடு அல்ல என்றும், அவர்கள் அரசியல் நெருக்கடி காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்
“திமுக ஆரம்பத்தில் இந்த விஷயத்தில் அமைதியாக இருந்தது. தற்போது அவர்கள் சாதி கணக்கெடுப்பு தொடர்பாக ஒருநபர் ஆணையத்தை அமைத்ததையும் பெரிதுபடுத்தி பேசுகிறார்கள். ஆனால் அதில் தெளிவும் திசையும் இல்லை. இதை நடத்துவதில் தொடர்ந்து உறுதியுடன் செயல்பட்ட ஒரே கட்சி அதிமுகதான்,” என அவர் தெரிவித்தார்.
“சாதி கணக்கெடுப்பை நடத்துவோம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கதும், துணிவுமிக்கதும். இது இந்தியாவின் சமூக கட்டமைப்பை மறுபரிசீலனை செய்யும் ஒரு முக்கியமான கருவி. இது நிச்சயமாக நாட்டின் வளர்ச்சிக்கு வழிகாட்டும்,” என அவர் கூறினார்.
அதே நேரத்தில், “சாதி கணக்கெடுப்பு என்பது சிக்கல்களைத் தீர்க்கும் மருந்தல்ல. ஆனால், இந்தியா முழுவதும் மக்களின் சரியான பிரதிநிதித்துவத்தைக் கொண்ட ஒரு சமூகத்தை கட்டியமைப்பதற்கு இது தேவைப்படும் ஒரு கருவி. மக்கள் யார், எங்கே உள்ளனர், எவ்வளவு முன்னேற்றம் தேவை என்பதை அறிய இக்கணக்கெடுப்பு அவசியமானது,” என எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.