தொழிலதிபரிடம் லஞ்சம் பெற முயன்ற அமலாக்கத்துறை இணை இயக்குநர் கைது

CBI arrests an Enforcement Directorate officer in Bhubaneswar for attempting to accept a bribe

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், அமலாக்கத்துறையின் (ED) இணை இயக்குநராக பணியாற்றி வந்த சிந்தன் ரகுவம்சி, லஞ்சம் பெற முயன்றதற்காக மத்திய புலனாய்வுத்துறையினரால் (CBI) கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.

சுரங்கத் தொழிலதிபர் ஒருவருக்கு எதிராக நிதி முறைகேடு தொடர்பான வழக்கை சிந்தன் ரகுவம்சி கையாளி வந்த நிலையில், அவர் நேரடியாக தொழிலதிபரை சந்தித்து, அமலாக்கத்துறை விசாரணையிலிருந்து விடுவிப்பதாகவும், அதற்காக ரூ.50 லட்சம் லஞ்சம் வழங்க வேண்டும் என்றும் கூறியதாக தெரிகிறது. மேலும், லஞ்சம் வழங்கியால் விசாரணை நடவடிக்கைகளை நீர்த்துப்போக்க முடியும் எனவும், கூடுதல் சலுகைகளும் வழங்கப்படும் என பேரம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தொழிலதிபர், சிந்தனின் கோரிக்கையை ஏற்கவில்லை என்றும், தொடர்ந்து அவரிடம் மிரட்டல்களை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, சிபிஐயிடம் ரகசியமாக புகார் அளித்த அவர், அதிகாரிகளைப் பயன்படுத்தி சிந்தனை கைது செய்யும் வகையில் திட்டமிட்டார்.

அதன்படி, சிந்தனிடம் முதற்கட்டமாக ரூ.20 லட்சம் தருவதாகக் கூறி, ஒரு ரகசிய இடத்திற்கு வருமாறு அழைக்கப்பட்டார். அந்த இடத்திற்கு வந்த சிந்தன் ரகுவம்சி, பணத்தை வாங்கும்போது, மறைந்திருந்த சிபிஐ அதிகாரிகள் அவரை கையும் களவுமாக கைது செய்தனர். பின்னர் அவரை புவனேஸ்வரில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், சிந்தன் ரகுவம்சி குறைந்தது ஒன்பது தொழிலதிபர்களுடன் தொடர்பில் இருந்துள்ளதாகவும், அவர்களிடமும் லஞ்சம் கேட்டு மிரட்டியிருக்கலாம் என்ற கோணத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், இந்நிகழ்வைத் தொடர்பாக சிபிஐ தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை