
பாபர் மசூதி போல் மாறுகிறதா அவுரங்கசீப் கல்லறை?
போராட்டத்தில் புனித நூல் எரிக்கப்பட்டதா?
கலவர பூமியாக மாறியது நாக்பூர்: பிண்ணனி குறித்த முழு தகவல்
அவுரங்கசீப் கல்லறையை அகற்ற கோரி இந்துத்துவா அமைப்பினர் நடத்திய போரட்டத்தில் ஒரு மதத்தின் புனித நூல் எரிக்கப்பட்டதாக தகவல் பரவியது. இதைத் தொடர்ந்து நாக்பூரில் பெரும் கலவரம் வெடித்தது.
அண்மை காலமாகவே அவுரங்கசீப் கல்லறை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை பல்வேறு இந்து அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் சத்ரபதி சிவாஜியின் மகன் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி சம்பா என்ற என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது. அதில் வரும் திரைப்பட காட்சிகளை வைத்து முகலாய மன்னர் அவுரங்கசீப்புக்கு எதிரான கருத்துகள் அதிக அளவில் பரப்பப்பட்டன.
அபு ஆஸ்மி இடைநீக்கம்
அவுரங்கசீப் மன்னருக்கு எதிராக தவறான தகவல்களை பரப்புகின்றனர். உண்மையில் அவர் ஒரு சிறந்த நிர்வாகி என்று அபு ஆஸ்மி மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் புகழ்ந்து கூறினார். இந்த கருத்தை முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் கண்டித்தார், மேலும் சட்டமன்ற கூட்டத் தொடர் முழுவதும் அபு ஆஸ்மி இடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதை தொடர்ந்து அவுரங்கசீப் கல்லறையை இடிக்க வேண்டும் என்ற குரல் வலுப்பெற்றது, இந்த கோரிக்கையை ஆதரிப்பதாக கூறிய முதல்வர் பட்நவிஸ், அதை சட்டப்பூர்வமாக செய்ய வேண்டும் என்றார்.
பாபர் மசூதி போல் அவுரங்கசீப் கல்லறை
அவுரங்கசீப்பின் கல்லறை அகற்ற வேண்டும் என பஜ்ரங்கதள், விஸ்வ இந்து பரிஷத் போன்ற இந்துத்துவா அமைப்புகளும்,ஆளும் கூட்டணி அமைப்பினரும் குரல் எழுப்ப, இந்த விவகாரம் பூதாகரமானது, மேலும் அவுரங்கசீப்பின் கல்லறையை அகற்றா விட்டால் பாபர் மசூதி போல் இடிக்கப்படும் என பஜ்ரங்கதள் அமைப்பு பகிரங்கமாக அறிவித்தது.
போராட்டம் கலவரமாக மாறியது
அவுரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வேண்டி 17/03/2025 அன்று விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங்கதள் உள்ளிட்ட இந்து அமைப்பினர் மாநிலம் போராட்டம் நடத்தினர். சில இடங்களில் அவுரங்கசீப் படங்களை எரித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மேலும் மராத்திய மன்னர் சம்பாஜியை புகழ்ந்தும் அவுரங்கசீப்புக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பட்டது.
நாக்பூரில் நடத்த போராட்டத்தில் ஒரு மதத்தின் புனித நூல் எரிக்கப்பட்டதாக தகவல் பரவியது. இதைத் தொடர்ந்து அந்த மதத்தினரும் அங்கு குவிந்தனர். பின்னர் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்தது. கலவரத்தில் காவல் துறை மீது கற்கள் வீசப்பட்டது மற்றும் கார்கள் உள்ளிட்ட பல வாகனங்கள் தீ வைத்து எரித்து எரிக்கப்பட்டன மேலும் பல வீடுகள் சூறையாடப்பட்டன . இந்த கலவரம் நாக்பூர் சித்னிச் மற்றும் மகால் பகுதி அருகே நடைபெற்றது.
போராட்டத்தில் அவுரங்கசீப்பின் படங்கள் மட்டுமே எரிக்கப்பட்டதாக பஜ்ரங்தள் அமைப்பினர் தெரிவித்தனர்.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
கோட் வாலி, கணேஷ் பீத், லக்ட் கஞ்ச் பச்பாவோலி, சாந்தி நகர், சக்கர்தாரா நந்தன் வன், இமாம்பாடா யசோதரா நகர் மற்றும் கபில் நகர் பகுதியி பதற்றமான சூழல் நிலவுவதால்,அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மக்கள் அனைவரும் அமைதியாக இருக்கும் படி முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் கோரிக்கை வைத்துள்ளார்.