மத்திய வருவாயில் மாநிலங்களுக்குப் 50% பங்கு வழங்க வேண்டும் – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

நிதி ஆயோக் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

மத்திய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50% பங்கீடு வழங்கப்பட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் அவர் பங்கேற்று, மாநிலங்களின் நலனுக்காக பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்.

முதலில், கடந்த 15-ஆவது நிதிக் குழு பரிந்துரைத்த படி மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய வரி பகிர்வு பங்கு 41% என இருந்தாலும், உண்மையில் வழங்கப்பட்டு இருப்பது 33.16% மட்டுமே என்பதை குறிப்பிட்டார்

இது மாநிலங்களின் நிதிச் சுமையை அதிகரிக்கிறது என்றும், ஒன்றிய அரசின் திட்டங்களை செயல்படுத்த மாநிலங்களுக்கு அதிக நிதிச் செலவுகள் ஏற்படுகின்றன என்றும் தெரிவித்தார். எனவே, மாநிலங்களுக்கு வருவாயில் 50% பங்கு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், P.M. SHRI திட்டத்தின் கீழ் SSA (Samagra Shiksha Abhiyan) நிதி தமிழ்நாட்டுக்கு வழங்கப்படவில்லை என்றும் கூறினார்.

சுமார் ₹2,200 கோடி நிதி 2024–2025 ஆண்டில் தமிழகத்துக்கு மறுக்கப்பட்டுள்ளது என்றும், மாநிலங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததைக் காரணமாக்கி நிதி மறுப்பது தவறு என்றும், அந்த நிதியை எந்தவித ஒருதலைப்பட்ச நிபந்தனையுமின்றி வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இத்துடன், காவிரி, வைகை, தாமிரபரணி போன்ற முக்கியமான ஆறுகளை மீட்டெடுக்க தேசிய திட்டம் உருவாக்க வேண்டும் என்றும், அவற்றுக்கான பெயர்கள் ஆங்கிலத்தில் வைக்கப்பட வேண்டும் என்று கூறினார். மாநிலங்கள் அவற்றை தங்கள் மொழிக்கு மொழி பெயர்த்து கொள்ளும் வாய்ப்பு இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

நகர்ப்புற வளர்ச்சிக்கும் பெரும் நிதியுடன் புதிய திட்டம் தேவைப்படுவதாகவும், அதில் உட்கட்டமைப்பு, இயக்கம் மற்றும் சுகாதாரம் முக்கிய அம்சங்களாக இருக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மொத்தமாக, மாநிலங்களுக்கு அதிக நிதி பங்கீடு, நியாயமான நிதியளிப்பு, பிராந்திய நதிகளுக்கான தனிச் சட்டங்கள், நகர்ப்புற மேம்பாடு போன்ற பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசிடம் அவர் முன்வைத்துள்ளார்.