அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை – டாஸ்மாக் வழக்கில் அதிரடி உத்தரவு

உச்சநீதிமன்றம் தடை – டாஸ்மாக் வழக்கில் அதிரடி உத்தரவு

தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்ததாக கூறப்படும் ரூ.1000 கோடிக்கு மேற்பட்ட ஊழல் குறித்த அமலாக்கத்துறையின் (ED) நடவடிக்கைகள், உச்சநீதிமன்றத்தின் தலையீட்டால் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளன. 

டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமையகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை கடந்த மார்ச் மாதம் சோதனைகளை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் உள்ளிட்ட பலர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

இதற்கு எதிராக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தும், அங்கிருந்து ஆணை கிடைக்காத நிலையில், வழக்கை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இன்று தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி, அமலாக்கத்துறை தங்களது அதிகார வரம்புகளை மீறி செயல்பட்டுள்ளதாக வலியுறுத்தினார்.

குறிப்பாக, அதிகாரிகள் அலுவலகத்திற்குள் திடீர் சோதனை நடத்தி தொலைபேசிகள் உள்ளிட்ட சாதனங்களை கைப்பற்றியமை மற்றும் ஊழல் குறித்த ஆதாரங்களைத் தெளிவாகக் காட்டாத அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் கேள்விக்குள்ளாகின.

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை வரம்பு மீறி நடக்கிறது. முறைகேடு நடந்தது என்றால் சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தலாம் என்றுகூறிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், டாஸ்மாக் வழக்கில் கூட்டாட்சி தத்துவத்தை மீறும் வகையில் அமலாக்கத்துறை செயல்பட்டுள்ளது. 

நிதி சார்ந்த முறைகேடு எங்கு நடைபெற்றுள்ளது என அமலாக்கத்துறை கூற முடியுமா? டாஸ்மாக் ஊழியர்களின் செல்போன்களை குளோன் செய்துள்ளது அமலாக்கத்துறை. தனிநபர்கள் செய்த விதி மீறலுக்காக ஒரு நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதா? என டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்து நீதிபதி அமர்வு கூறின. மேலும் தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பினர்.