சிறைகளில் சாதிய பாகுபாடு காட்டக்கூடாது : தமிழ்நாடு அரசு உத்தரவு 

சிறைகளில் சாதிய பாகுபாடு காட்டக்கூடாது : தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழக சிறைகளில் சாதி பாகுபாடு தொடர்பாக கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு புகார்கள் எழுந்து வந்துள்ள நிலையில், தற்போது தமிழ்நாடு அரசு முக்கியமான தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது.

சிறைச்சாலைகளில் சாதிய பாகுபாட்டை முற்றிலுமாகக் கட்டுப்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியதை அடுத்து, தமிழ்நாடு சிறை விதிகளில் மாற்றம் செய்து புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த புதிய உத்தரவின் அடிப்படையில், இனி சிறை அதிகாரிகள் கைதியிடம் சாதி தொடர்பான தகவல்களை கேட்பது தடை செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், எந்தவொரு சிறை ஆவணத்திலும் சாதியை குறிப்பதும் கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சாதி அடிப்படையில் கைதிகளை வகைப்படுத்தி, அவர்களுக்கு வேறுபட்ட பணிகளை ஒதுக்கக்கூடாது என்றும் அரசு அறிவித்துள்ளது.

மனிதக் கழிவுகளை அகற்றும் பணிக்கு கைதிகளை பயன்படுத்தக்கூடாது என்றும், இந்த வகையான வேலைகளைச் செய்ய மனிதர்களை கட்டாயப்படுத்துவதை தடை செய்யும் சட்டம் சிறைகளிலும் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக செப்டிக் டேங்க், கழிவுநீர் தொட்டி போன்ற இடங்களை சுத்தம் நெய்வதற்கு கைதிகளை அனுமதிக்கக் கூடாது என்பதும் இந்த உத்தரவின் முக்கிய அம்சமாகும்.

தமிழகத்தில் தற்போது ஒன்பது மத்திய சிறைகள், மூன்று பெண்கள் தனிச்சிறைகள் மற்றும் பல மாவட்ட, கிளைச்சிறைகள் உள்ளிட்ட மொத்தம் 138 சிறைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், சமூக நீதி மற்றும் மனித உரிமைகளை பராமரிக்கும் வகையில், இந்த புதிய உத்தரவு ஒரு முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

பல நூற்றாண்டுகள் கடந்தும் சமூகத்தின் மூலையில் ஒட்டிக்கொண்டிருக்கும் சாதி பாகுபாட்டின் சாயல், இன்று கல்வி, கோவில், வேலை, அரசியல் மட்டுமல்ல, சிறைகள் வரை சென்று விட்டது என்பது வருத்தமான உண்மைதான். இதைத் தடுக்க அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை, சமூக நீதியின் பாதையில் ஒரு புதிய அடியை பதிக்கிறது என்றே கூறலாம்.