12 ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது இந்தியா !!

India Wins ICC Champions Trophy After 12 Years

துபாயில் (மார்ச் 09) நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிப் பெற்றது, இதன் மூலம் இந்தியா தனது மூன்றாவது சாம்பியன்ஸ் டிராபியை தாயகம் கொண்டு வரவுள்ளது.

ஆரம்பத்தில் அதிரடி

டாஸில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது, தொடக்க ஆட்டக்காரர்களாக ரச்சின் ரவீந்தரா,வில் யங் களமிறங்கினர்.இந்த தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படித்திய ரச்சின் ரவீந்தரா பாண்ட்யா வீசிய ஒரே ஓவரில் 3 பவுண்டரிகள்,ஒரு சிக்சர் என  அதிரடியாக விளையாடி, 7 ஓவர்கள் முடிவில் 50 ரன்களை வேகமாக எட்டினர்.

சுழலின் மாயாஜாலம்

வருண் வீசிய முதல் ஓவரிலே ரச்சின் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஸ்ரேயஸ் ஐயர் தவறவிட்டார், இருப்பினும் மறுமுனையில் ஆடிய வில் யங்(15 ரன்கள்) விக்கெட்டையை  வருண் வீழ்த்தினார்.குல்தீப் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே அதிரடியாக விளையாடி வந்த  ரச்சின் ரவீந்தராவை கீளின் போல்ட் ஆக்கீனார்,அடுத்த வீசிய ஓவரில் நியூசிலாந்தின் நட்சத்திர வீரரான கேன் வில்லியம்சன்(11 ரன்களில்) குல்தீபிடமே விக்கெட்டையை கொடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்தாக பந்து வீசிய ரவீந்தர் ஜடேஜா டாம் லாதம் விக்கெட்டை எடுத்து நியூசிலாந்தின் வெற்றி வாய்ப்பை கேள்விகுறியாக்கினர்.

81 பந்துகளாக பவுண்டரி இல்லை

5வது விக்கெட்டுக்கு கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல் ஜோடி சேர்ந்தனர். இருவரையும் ஒரு பவுண்டரி கூட அடிக்கவிடாமல் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். அக்சர் படேலின் 14-வது ஓவரில் பவுண்டரி அடித்தநிலையில் அதன்பின் 27-வது ஓவரில்தான் பவுண்டரி அடித்தனர்.10 ஓவரில் 69 ரன்கள் இருந்த நியூசிலாந்து அணி 138 ரன்கள் அதாவது அடுத்த 69 ரன்கள் சேர்க்க 21 ஓவர்கள் எடுத்துக்கொண்டனர், இந்த 21 ஓவர்களில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகள் மட்டுமே அடித்தனர்.மிட்செல், பிலிப்ஸ் இருவரும் ஓரளவுக்கு தாக்குப்பிடித்தால் 150 ரன்களை எட்டியது. இருவரையும் பிரிக்க மீண்டும் வருண் அழைக்கப்பட்டார். வருண் வீசிய 37-வது ஓவரில் பிலிப்ஸ் 34 ரன்கள் சேர்த்திருந்த போது க்ளீ்ன் போல்டாகி வெளியேறினார். இருவரும் 5-வது விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்தனர்.

பிரேஸ்வெல் அதிரடி ஆட்டம்

பிரேஸ்வெல் களத்திற்கு வந்தது முதலே அதிரடியாக ஆடியதால் ரன்கள் வேகமாக உயர்ந்தது, நிதானமாக ஆடிய டேரல் மிட்ஷெல் 91 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். ஒருநாள் போட்டிகளில் அவர் மெதுவாக அடித்த அரைசதமாகும். ஷமி வீசிய 46 ஓவரில் டேரல் மிட்ஷெல் 63 ரன்களில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அதிரடியாக விளையாடிய பிரேஸ்வெல் 53 ரன்களுடன் இறுதிவரை  ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 50 ஓவர் முடிவில்  நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 251 சேர்த்தது.

ரோஹித் அதிரடி ஆட்டம்

252 என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித்,கில் களமிறங்கினர். முதல் ஓவர் முதலே தனது அதிரடி ஆட்டத்தை தொடங்கினார் ரோஹித், இருப்பினும் மற்ற போட்டிகள் போல் இல்லமால் ஒருபுரம் அதிரடி,  மற்றொருபுரம் தனது விக்கெட் மீது கவனம் செலுத்தி நிலைத்து நின்று ஆடினார்.10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 64 ரன்கள் சேர்த்தது.

விக்கெட் சரிவு

சாண்ட்னர் வீசிய 19 ஓவரில் நிதானமாக விளையாடி வந்த கில் 31 ரன்களில் பிலிப்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.இந்திய அணி முதல் விக்கெட்க்கு 105 ரன்கள் சேர்த்தது.இந்த தொடரில் இந்திய அணி முதல் விக்கெட்டுக்கு எடுத்த அதிகபட்ச ரன் இது. அடுத்து வந்த நட்சத்திர வீரரான விராட் கோலி பிரேஸ்வெல் வீசிய முதல் ஓவர் இரண்டாவது பந்தில்  ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். 3வது விக்கெட்டுக்கு ரோஹித்துடன் இணைந்த ஷ்ரேயஸ் விக்கெட்டில் கவனம் செலுத்தி இருவரும் 1,2 ரன்கள் எடுத்து நிதானமாக விளையாடி வந்தனர். ரவீந்தரா பந்து வீச்சில் இறங்கி அடிக்க முற்ப்பட்ட போது கேப்டன் ரோஹித் 76 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஷ்ரேயஸ்,அக்சரும் இணைந்து அணியை வெற்றி நோக்கி மெதுவாக நகர்தினர். நான்காவது விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்த நிலையில், சாண்டனர் வீசிய பந்தில் ஷ்ரேயஸ் (48 ரன்களில்) ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து அக்சரும் 29 ரன்னில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.

வெற்றி முகம்

ராகுலும், பாண்ட்யாவும் இணைந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். கடைசி 32 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட்டப் போது, ரவீந்தரா வீசிய 47 ஓவரில் ஹர்திக் பாண்ட்யா சிக்சர் அடித்து பதற்றத்தை குறைத்தார். தொடர்ந்து பெரிய ஷாட்டுகளை ஆட முயன்று தனது விக்கெட் இழந்து ஹர்திக் வெளியேறினார். வெற்றிப் பெற கடைசி இரண்டு  ஓவர்களில் 7 ரன்கள் தேவைப்பட்டது. ரூர்க் வீசிய 49 வது ஓவரில் 5 ரன்கள் தேர்த்த நிலையில்,கடைசிப் பந்தில் ஜடேஜா பவுண்டரி அடித்து வெற்றிப் பெற வைத்தார். இதன் மூலம் இந்தியா தனது மூன்றாவது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. மேலும் கடைசியாக விளையாடி  24 ஐசிசி போட்டிகளில் 23 போட்டிகளில் இந்தியா வெற்றிப் பெற்றுள்ளது.இதை தொடர்ந்து கிரிக்கெட் உலகத்தில் இந்தியாவின் ஆதிக்கமே உயர்ந்துள்ளது என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி கடந்த டி20 போட்டியில் வெற்றி பின் அணியின் மூத்த வீரர்களான விராட்,ரோஹித்,மற்றும் ஜடேஜா என அடுத்தடுத்து ஓய்வை அறிவித்தனர். அதே போல் ஐசிசி சான்பியன்ஸ் போட்டியுடன், ஒரு நாள் போட்டியிலிருந்து விராட் கோலி,ரோஹித் மற்றும் ஜடேஜா ஓய்வை அறிவிக்கபோகிறார் என அவ்வப்போது வதந்திகள் பரவி வந்தன, நேற்றைய போட்டி முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் ரோஹித் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக,”இது ஒரு அற்புதமான வெற்றி, இதன் மூலம் உலகிற்கு நாங்கள் எந்த அளவிற்கு வலிமையான அணி என தெரிவித்துள்ளோம். மேலும் இந்த பார்மட்டில் இருந்து தற்போது  நான் ஓய்வை அறிவிக்கப் போவதில்லை, எங்களது பயணம் தொடரும்” என கூறினார். அதே போல் விராட்,ஜடேஜாவும் ஓய்வு குறித்து எதுவும் கூறவில்லை. இதனால் ரசிகர்கள் அணைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.