
புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் அருகே உள்ள வேவளாணி கிராமத்தில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் உணவு ஒவ்வாமையால் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
நேற்று சத்தியராஜ் (34) என்பவர் குழந்தையின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக உறவினர்கள், நண்பர்கள் என பலரை தனது வீட்டுக்கு அழைத்துள்ளார்
மேலும் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டிய பிறகு கலந்து கொண்ட அனைவருக்கும் கேக் மற்றும் அசைவ உணவும் வழங்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் விழாவில் பங்கேற்ற கருப்பையா (60) என்பவருக்கு நேற்று, இரவில் உணவு ஒவ்வாமையால் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்
இதே நேரத்தில் இந்த விழாவில் பங்கேற்ற , சின்னப்பொண்ணு, மஞ்சுளா, அஞ்சலி தேவி, சீனிவாசன், கீர்த்தனா, விசாலி, நாகரத்தினம், லட்சுமி, வடிவுக்கரசி உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர் திடீரென வாந்தி, மயக்கம் போன்ற உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்
அவர்களில் பலர் ஏம்பல், ஆவுடையார் கோவில், அறந்தாங்கி மற்றும் சிவகங்கை மாவட்டம் சூரக்குடி ஆகிய அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட, நிலையில் தீவிர சிகிச்சை தேவைப்படும் சிலர் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து அறந்தாங்கி கோட்டாட்சியர் சிவக்குமார் மற்றும் ஆவுடையார்கோயில் வட்டாட்சியர் நேரில் மருத்துவமனையில் சென்று பாதிப்புகளை கேட்டறிந்ததோடு ஏம்பல் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
அசைவ உணவினாலா அல்லது கேக் மூலம் ஏற்பட்ட உணவு ஒவ்வாமையாலா இந்த நிலைமை ஏற்பட்டது என்பது குறித்து சுகாதாரத் துறையினர் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.