
இந்திய ராணுவத்திற்கு அவமரியாதை ஏற்படுத்தியதாக செல்லூர் ராஜூக்கு எதிராக கண்டனங்கள் வலுப்பெற்று வருகின்றன
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த வாரம் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தது நாட்டின் பல இடங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, பாகிஸ்தானில் இயங்கி வந்த பல பயங்கரவாத முகாம்களை ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற ராணுவ நடவடிக்கையின் மூலம் தாக்கி அழித்தது.
இதனைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே பெரும் பதற்றம் நிலவி வந்த சூழ்நிலையில் இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி, சண்டை நிறுத்த ஒப்புக்கொண்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்திய ராணுவத்தின் துணிச்சலுக்கு பாராட்டுச் செலுத்தும் வகையில், தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
அதே நேரத்தில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “இந்த போர் விவகாரத்தில் இந்திய ராணுவ வீரர்களை அல்ல, பிரதமர் மோடியை தான் திமுகவினர் பாராட்ட வேண்டும்,” என கூறியிருப்பது புதிய சர்ச்சையை உருவாகியுள்ளது
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “போரில் வெற்றிக்கான காரணம் ராணுவ வீரர்கள் அல்ல, மத்திய அரசு வழங்கிய உயர் தொழில்நுட்ப ஆயுதங்கள். இந்த ஆயுதங்களை வாங்கிக் கொடுத்தது பிரதமர் மோடிதான். எனவே திமுகவினர் அவருக்கு தான் நன்றி கூற வேண்டும்,” என கூறியுள்ளார்.
இக்கூறுகள் முன்னாள் ராணுவத்தினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன் கரூரில், முன்னாள் ராணுவத்தினர் ஒருங்கிணைந்த போராட்டத்தில் ஈடுபட்டு, எல்லையில் உயிர் தியாகம் செய்யும் வீரர்களை விமர்சித்ததற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
செல்லூர் ராஜூ தன் பேச்சை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்றும் மன்னிப்பு கேட்காவிட்டால், எதிர்வரும் தேர்தலில் அவரது தொகுதியில் அவருக்கு எதிராக பிரசாரம் நடத்துவோம் என ஆவேசமாக தெரிவித்துள்ளனர்.