
காஷ்மீர் பஹல்காமில் ஏப்ரல் 22-ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததற்குப் பதிலடியாக, இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது.
இதையடுத்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவி வரும் பதற்றம் கடுமையாகி, ஏவுகணைகள் மற்றும் டிரோன் தாக்குதல்கள் ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் எல்லைப் பகுதிகளில் இடம் பெற்றன.
இதனிடையே, எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை மற்றும் மோதல் நிலவுவதால், பெரும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இரு நாடுகளும் நேரடி போர் நிலைக்கு நெருங்கி விட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் மதிப்பீடு செய்துள்ளன.
மோதலைத் தவிர்க்கும் வகையில், சர்வதேச நாடுகள் இரு தரப்பையும் சமாதானத்தை வலியுறுத்தியுள்ளன
இந்நிலையில், நேற்று இரவு நிகழ்ந்த தாக்குதல் மற்றும் தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலை குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகள் மற்றும் தலைமை தளபதியுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின் போது, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.