விஜயைச் சந்திக்க வந்த தொண்டருக்கு துப்பாக்கியுடன் மிரட்டல் – மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு!  

விஜயைச் சந்திக்க வந்த தொண்டருக்கு துப்பாக்கியுடன் மிரட்டல்!

மதுரை விமான நிலையத்தில் நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயைச் சந்திக்க வந்த தொண்டர் ஒருவரிடம் பாதுகாப்புப் பணியில் இருந்த அதிகாரி ஒருவர் துப்பாக்கியுடன் மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, விஜய் இன்று மதுரை விமான நிலையம் வழியாக சென்னைக்கு புறப்பட இருந்தார். 

அவரது வருகையைத் தொடர்ந்து, விமான நிலையத்தில் அவரது ரசிகர்களும், தமிழக வெற்றிக் கழக தொண்டர்களும் திரண்டிருந்தனர்.

விஜய் காரிலிருந்து இறங்கியதும், ரசிகர்களை நோக்கி கை அசைத்து அவர்களுக்கு பதிலளித்தார்.

இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த இன்பராஜ் என்ற தொண்டர் ஒருவர், விஜய்க்கு சால்வை அணிவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி அவரை நெருங்கியுள்ளார்

அவர் சால்வையை விரிக்க முயன்ற போது, அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த   காவலர் திடீரென தன் துப்பாக்கியை எடுத்து, அந்த தொண்டரின் தலையருகே வைத்ததாகக் கூறப்படுகிறது.

விஜய்க்கு சால்வை போட வந்த தொண்டரிடம் துப்பாக்கி காட்டி மிரட்டுவது தேவையா என்ற கேள்வியும், இது தவறான பாதுகாப்பு நடத்தை அல்லவா என்ற விமர்சனமும் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.

பாதுகாப்பு என்பது முக்கியமான ஒன்றாக இருந்தாலும், பொதுமக்கள் மீது இவ்வாறு துப்பாக்கியை காட்டியதற்கு  பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.