வக்ஃப் வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம் தலைமை நீதிபதி வெளியிட்ட உத்தரவு

வக்ஃப் வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம் தலைமை நீதிபதி வெளியிட்ட உத்தரவு

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஓய்வு பெறுவதால், வக்ஃப் திருத்த்ச் சட்டத்திற்கு எதிரான வழக்கை புதிய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் விசாரிக்க உத்தரவு.

ஒன்றிய அரசு கொண்டு வந்த வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் மற்றும் தவெக கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பாக 70 மேற்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது பேசிய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா “வக்ஃப் விவகாரத்தில் ஒன்றிய அரசு மற்றும் மனுதாரர்கள் பதில் மனுக்களை தாக்கல் செய்துள்ளன.

மேலும், இந்த வழக்கில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். நான் ஓய்வு பெற இருப்பதால், மனுதாரர்கள் அனைவரும் ஒப்புக்கொண்டால் உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி கவாய் அமர்வு இந்த வழக்கை விசாரிக்க பரிந்துரைக்கிறோம் ” எனத் தெரிவித்தார்.

தலைமை நீதிபதியின் இந்த பரிந்துரையை மனுதாரர்களின் வழக்கறிஞர்கள் ஏற்பதாக சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து வழக்கை மே15 ம் தேதிக்கு ஒத்திவைத்து தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா உத்தரவிட்டார்.

மேலும் இந்த வழக்கில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட வக்ஃப் திருத்த சட்டத்தின் கீழ் எந்த ஒரு நடவடிக்கையும் நியமனங்களும் நடைபெறக் கூடாது எனும் இடைக்கால உத்தரவையும் நீட்டிப்பதாக உத்தரவிட்டார்.