நீலகிரியில் காய்கறி கண்காட்சியுடன்  விமரிசையாக தொடங்கிய கோடைவிழா !

நீலகிரியில் காய்கறி கண்காட்சியுடன் விமரிசையாக தொடங்கிய கோடைவிழா !

சூழல் அழகும், இயற்கை வளங்களும் நிரம்பிய நீலகிரி மாவட்டத்திற்கு தினமும்  ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக கோடை காலமான  ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இங்கு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையில் பலமடங்கு அதிகரிக்கிறது.

அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நீலகிரியில் ”கோடைவிழா” என்ற பெயரில் மலர் கண்காட்சி, காய்கறி கண்காட்சி, ரோஜா கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.  

இந்நிலையில்,  இன்று கோத்தகிரியில் உள்ள நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் சிறப்பாக கோடை விழா தொடங்கியது.

இந்த காய்கறி கண்காட்சிக்காக பல ஆயிரம் டன் காய்கறிகளை கொண்டு பூங்கா முழுவதும் கலைநயத்துடன் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பல்வேறு வகையான மலர்களும் பூத்து குலுங்கி பார்வையாளர்களை மகிழ்வித்தன.

தமிழர் பாரம்பரிய கலாசாரத்தை ஊக்குவிக்கும் வகையில், ஜல்லிக்கட்டு காளை, சிலம்பாட்டம், மரகதப்புறா, பச்சைக்கிளி, வண்ணத்துப்பூச்சி உள்ளிட்ட பல வண்ணமயமான உருவங்கள் காய்கறிகளை கொண்டு அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தன. இது சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

மேலும் தோட்டக்கலைத் துறை மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் உற்பத்தி செய்த விவசாயப் பொருட்கள் 15 அரங்குகளில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. சிறுவர்களை கவரும் வகையில் கார்ட்டூன் மற்றும் வண்ண உருவங்களும் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த ஆண்டுக்கான கோடைவிழா வெகு சிறப்பாகத் தொடங்கியுள்ள நிலையில், எதர்வரும் நாட்களில் மலர் கண்காட்சி மற்றும் ரோஜா கண்காட்சிகளும் நடைபெற உள்ளதாக  மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளமை குறிப்படதக்கது