பாஜகவின் சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு ; அக்கறையா…அரசியலா?

பாஜகவின் சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு ; அக்கறையா...அரசியலா

சாதிவாரிய கணக்கெடுப்பு என்றால் என்ன? ஏன் எடுக்க வேண்டும்?

இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு கடைசியாக எப்போது எடுக்கப்பட்டது?

திடீரென சாதிவாரி கணக்கெடுப்பிற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது ஏன்? என்பதை பற்றி முழுமையாக இந்த பதிவில் காண்போம்.

இந்தியாவில் மக்கள் பலதரப்பட்ட சாதியின் அடிப்படையில் வாழ்கின்றனர். இதில் எந்த வகுப்பின் மக்கள் விளிம்பு நிலையில் உள்ளனர் என்பதை தெரிந்து கொண்டு. அவர்களை பொருளாதர தரத்தில் மோலோக்கி வளர்க்கவும், அவர்கள் பயன்பெறும் வகையில் திட்டங்களை வகுக்கவும் சாதிவாரி கணக்கெடுப்பு அமல்படுத்தப்பட்டது.

10 பேரின் உணவை 100 பேருக்கு தருவதும், 100 பேரின் உணவை 10 பேருக்கு தருவதும் அநீதியாகும். அதேபோல் கல்வி,அதிகாரம்,வேலை வாய்ப்பு என அனைத்தையும் ஒரு தரப்பு மக்கள் மட்டும் பயன்படுத்துவதை தடுக்கவே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

இந்தியாவில் முதல் முறையாக 1881-82 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தான் நாட்டின் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது முதல் 1931 ஆம் ஆண்டு வரை இடைவிடாமல் மக்கள்தொகை  கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் மக்களின் சாதி விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்பட்டு பொதுவெளியில் வெளியிடப்பட்டன.

1941ம் ஆண்டு நடத்த வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு இரண்டாம் உலகப் போரின் காரணமாக நிறுத்தப்பட்டது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1951ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு மீண்டும் நடத்தப்பட்டது. ஆனால் இந்த முறை சாதி பற்றிய கேள்விகள் இடம்பெறவில்லை. மக்களிடையே தேசிய ஒற்றுமை தான் முக்கியம் சாதி வேற்றுமை கூடாது என்பதற்காக, இந்த கேள்வி தவிர்கப்பட்டதாக அப்போது  தலைவர்கள் தெரிவித்தனர்.

இருப்பினும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதால் அவர்களது தகவல்கள் மட்டும் சேகரிக்கப்பட்டன. மற்ற சாதியின் தகவல்கள் சேகரிக்கப்படவில்லை. ஆகவே மற்ற சாதியின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை 1931ஆம் ஆண்டில்  எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இருந்த விகிதமே இப்போதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் பிறகு ஒவ்வொரு பத்து ஆண்டும் மக்கள்தொகை கணக்கெடுப்பு மட்டுமே எடுக்கப்பட்டது. இருப்பினும் 2011 ஆம் ஆண்டு நடந்த மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதி தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டாலும், அவை வெளியிடப்படவில்லை.

இதற்கடுத்த கணக்கெடுப்பு 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்டிருக்க வேண்டும் , ஆனால் கொரானா பரவல் காரணமாக நடத்தப்படவில்லை.

சாதிவாரி மக்கள்தொகை விவரங்கள் முறையாக இல்லாததால் ஒன்றிய அரசும், மாநில அரசும் பொருளாதர கொள்கைகள், கல்வி கொள்கைகள் போன்றவற்றை வகுக்கும் போது மிகவும் சிரமப்படுகிறது.

இதனால் தேவையானவர்களுக்கு தேவையானவை கிடைக்காமல் போய்விடுகிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றால், அதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு தான் ஒரே வழி என்பதை உணர்ந்தனர்.

இதையடுத்து பல வருடங்களாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி வலியுறுத்தி வந்தனர். குறிப்பாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியின் தேர்தல் வாக்குறுதியாக இந்த கோரிக்கை இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் இது குறித்து பேசி வந்தனர்.

சாதிவாரி கணக்கெடுப்பை குறித்து இதுவரை மெளனம் காத்த பாஜக அரசு இன்று, அதிரடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த போவதாக திடீரென  அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து பேசப்பட்டதாக ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார்.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியாதவாது “ வரும் மக்கள்தொகை  கணக்கெடுப்புடன் சேர்த்து  சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

தொடர்ந்து பேசிய அவர் சமூக நீதி எப்போதும் மோடி அரசின் முதன்மையான முன்னுரிமையாக இருந்து வருகிறது. அதை நோக்கி அரசு எடுத்து வைக்கும் மேலும் ஒரு அடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

காங்கிரசும் அதன் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தியும் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து சமீபகாலமாக குரல் கொடுத்தாலும், நீண்டகாலமாக சாதிவாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் எதிர்த்தது என்பதே உண்மை. நாடு சுதந்திரம் அடைந்தத்திற்குப் பிறகு ஒருமுறை கூட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டதில்லை என்பது தான் உண்மை.

சமூகத்தின் எந்த பிரிவினரையும் பாதிக்காமல், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு 10% இடஒதுக்கீட்டை கடந்த காலத்தில் இந்த அரசு அறிமுகப்படுத்தியது போல சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி நலிவடைந்த மக்கள் பயன்பெறும் வகையில் திட்டங்களை வகுத்து, அவர்களை பொளாதரத்தில் மோலோக்கி இந்த அரசு கொண்டு செல்லும் என்று கூறினார்.

ஆனால் இந்த கணக்கெடுப்பு எப்போது தொடங்கும், இதற்காக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, இதற்கான காலக்கெடு  போன்ற எந்தவிதமான தகவல்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

பாஜக அரசின் இந்த அறிவிப்பை எதிர்க்கட்சி உட்பட பலரும் வரவேற்றாலும், பீகார் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பு “ஒரு கண்துடைப்பு”  என்று பலரும் விமர்சனம் செய்கின்றனர்.

2021ல் நடந்திருக்க வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. நிலைமை சீரானதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு  நடத்தியிருக்கலாம்.

ஆனால் இதுவரை மெளனம் காத்த பாஜக அரசு தற்போது பீகார் சட்டமன்ற தேர்தலில் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குக்களை குறிவைத்தே சாதிவாரி கணக்கெடுப்பு என்ற அறிவிப்பை அறிவித்துள்ளது.

அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பை 2031ல் தான் நடத்த வேண்டும். மக்கள்தொகை கணக்கெடுப்பில் சுமார் 33 லட்சம் பேர் ஈடுபவார்கள். அவர்களுக்கு பயிற்சி அளிக்கவே ஓராண்டு ஆகிவிடும்.

ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் சராசரியாக 30க்கும் மேற்பட்ட கேள்விகள் ஏற்கனவே கேட்க்கப்பட்டு வந்துள்ளது. தற்போது இதில் சாதி பற்றிய கேள்வியும் சேர்க்கப்பட உள்ளது.

இப்படி நாடு முழுவதும் சேகரிக்கப்பட்ட தரவுகளை பகுப்பாய்வு செய்து சாதிவாரி உள்ளிட்ட விவரங்கள் வெளியிட இன்னும் சில ஆண்டுகள் ஆகும்.

இதில் சாவல்கள் இப்படி இருக்கும்பட்சத்தில், சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து முறையான அறிவிப்பு எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பதால், பீகார் தேர்தலுக்கான வெறும் கண்துடைப்பு அறிவிப்பாகவே இது இருக்க வாய்ப்பு இருக்கிறது என்ற அரசியல் வட்டாரங்களில் கருத்து நிலவி வருகிறது.

எப்போது மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்பதை ஒன்றிய அரசு அறிவிப்பது தான் இதற்கு ஒரே தீர்வு.