நடிகர் அஜித் குமார் மருத்துவமனையில் அனுமதி – காரணம் என்ன?

நடிகர் அஜித் குமார் மருத்துவமனையில் அனுமதி - காரணம் என்ன

உடல்நலக் குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் நடிகர் அஜித் குமார் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிப்பு, துப்பாக்கிச் சூடு, பைக் ரேஸ், கார் ரேஸ் என பன்முகத் தன்மையோடு தமிழ் திரையுலகில் திகழ்பவர் தான் நடிகர் அஜித் குமார். அண்மையில் இவர் நடித்து வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

படம் நடித்து முடிந்த கையோடு ஐரோப்பாவில் நடைபெற்ற கார் ரேஸில் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை பிடித்து அசத்தி இருந்தார். இதற்கு முன்னர் துபாயில் நடைபெற்ற கார் ரேஸிலும் மூன்றாவது இடத்தை பிடித்து நாட்டிற்கு பெருமை சேர்ந்திருந்தார்.

பன்முகத் தன்மையில் ஆளுமை கொண்ட அஜித்குமார், கலைப்பிரிவில் ஆற்றிய சாதனைகளை பாராட்டும் வகையில் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் விருதை வழங்கி ஒன்றிய அரசு கவுரவித்தது.

குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற பிரமாண்டமான விழாவில் மனைவி ஷாலினி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் குடியரசு தலைவரிடம் இருந்து பத்ம பூஷன் விருதை நடிகர் அஜித்குமார் பெற்றுக் கொண்டார்.

விருது பெற்றுக் கொண்டு சென்னை திரும்பிய அஜித்குமாருக்கு நடுவானிலேயே விமான நிறுவனம் மற்றும் நலம் விரும்பிகள் நடத்திய பாராட்டு விழாவில் கேக் வெட்டி நடிகர் அஜித் குமார் மகிழ்ச்சியை கொண்டாடினார்.

இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையம் வந்த அஜித்குமாருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர். இதற்கு மத்தியில் செய்தியாளர்களிடையே பேசிய அஜித் குமார், அனைவருக்கும்  நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன், விரைவில் நேரில் சந்தித்து பேசுவோம் என்றார்.

இந்நிலையில் அஜித் குமாருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது, இதையடுத்து சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வயிறு வலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், கார் பந்தயத்தில் பங்கேற்ப்பதற்காக நாளை துபாய் புறப்படுவதால் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளவே நடிகர் அஜித்குமார் மருத்துவமனைக்கு சென்றுள்ளதாக அஜித்குமார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பரிசோதனை முடிந்து மாலை வீடு திரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.