மக்கள் தொகையுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

மக்கள் தொகையுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

நாட்டில் அடுத்து நடைபெறவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ஜெய் சங்கர் மற்றும் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அஸ்வினி வைஷ்ணவ் கூறியாதாவது, வரும் மக்கள்தொகை  கணக்கெடுப்புடன் சேர்த்து  சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அமைச்சர்வை ஒப்புதல் வழங்கி உள்ளது.

ஒரு சில மாநில அரசுகள், தன்னிச்சையாகவே அவர்கள்மாநிலத்திற்குள்ளாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி உள்ளன. இந்த செயல்முறையை சிலர் சரியாக செய்திருந்தாலும், சிலர் அரசியல் ஆதாயத்திற்காக வெளிப்படைத் தன்மையில்லாத கணக்கெடுப்பினை நடத்தி உண்மைத் தகவல்களை மறைத்துள்ளனர்.

இது சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால் எதிர்வரும் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 246ன் படி மக்கள்தொகை கணக்கெடுப்பானது ஒன்றிய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டதாக 7வது அட்டவணையில் 69 வது இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக நீதி எப்போதும் மோடி அரசின் முதன்மையான முன்னுரிமையாக இருந்து வருகிறது. அதை நோக்கி அரசு எடுத்து வைக்கும் மேலும் ஒரு அடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

காங்கிரசும் அதன் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து சமீபகாலமாக குரல் கொடுத்தாலும், நீண்டகாலமாக சாதிவாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் எதிர்த்தது என்பதே உண்மை. நாடு சுதந்திரம் அடைந்தத்திற்குப் பிறகு ஒருமுறை கூட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டதில்லை என்பது தான் உண்மை.

சமூகத்தின் எந்த பிரிவினரையும் பாதிக்காமல், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு 10% இடஒதுக்கீட்டை கடந்த காலத்தில் இந்த அரசு அறிமுகப்படுத்தியது போல, சமூகம் மற்றும் நாட்டின் நலன்களை காப்பதில் இந்த அரசு உறுதி பூண்டுள்ளது என்பதை நிரூபிக்கிறது என்று கூறினார்.

இந்த கணக்கெடுப்பு எப்போது தொடங்கும், இதற்காக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது போன்ற தகவல்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆண்டே இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பிற்கு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட பலரும் வரவேற்றுள்ளனர். இருப்பினும் எதிர்வரும் பீகார் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டே ஒன்றிய அரசு இந்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுதாக அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அரசியல் விமர்சகர் உட்பட பலரும் விமர்சித்துள்ளனர்.

இந்த அறிவிப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி  “ 11 ஆண்டுகள் எதிர்ப்பிற்கு பிறகு மக்கள்தொகையுடன் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதாக கூறியுள்ள ஒன்றிய பாஜக அரசின் திடீர் முடிவை  நாங்கள் முழுமையாக வரவேற்கிறோம்.

ஆனால் இதை செயல்படுத்துவதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்புக்கான நிதி ஒதுக்கப்பட வேண்டும். மேலும் இடஒதுக்கீடு மீதான 50 சதவீத உச்சவரம்பை நீக்க வேண்டும் என்று கூறினார்.

ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பு குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X பக்கத்தில் பதிவை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக பேசி வந்த பிரதமரின், அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்த பிறகு தான், அவருக்கு ஞானோதயம் வந்துள்ளது.

பீகார் மாநிலத் தேர்தலில் சமூகநீதி விவகாரம் ஓங்கி ஒலிப்பதால் தான், தற்போது இதனை அறிவித்துள்ளார்கள்.  மேலும் இந்தக் கணக்கெடுப்பு எப்போது தொடங்கும், எப்போது முடிவுறும் போன்ற முக்கியமான வினாக்களுக்கு இன்னும் விடையில்லை.

மேலும் திராவிட மாடலின் வழியே சமூகநீதிக்கான எங்கள் பயணத்தில் திமுகவுக்கும், நாம் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இந்த அறிவிப்பு மற்றுமொரு வெற்றியாகும் என பதிவிட்டிருந்தார்.

சுமார் 93 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றிய அரசால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை மனதார வரவேற்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.