நிலைமையை அமைதியாக  கையாளுமாறு  இந்தியா – பாகிஸ்தான் அரசுகளுக்கு ஐ.நா. சபை பரிந்துரை!

நிலைமையை அமைதியாக கையாளுமாறு இந்தியா - பாகிஸ்தான் அரசுகளுக்கு ஐ.நா. சபை பரிந்துரை!

ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம், இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையிலான உறவுகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா பல கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்ததுடன், பாகிஸ்தான் குடிமக்களுக்கு வழங்கப்பட்ட விசாக்களையும் ரத்து செய்துள்ளது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தான் இந்திய விமானங்களுக்கு தங்கள் வான்வெளியை பயன்படுத்த தடை விதித்துள்ளது.

மேலும், 1972 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட சிம்லா ஒப்பந்தத்தையும் பாகிஸ்தான் இரத்து செய்துள்ளது. சிந்து நதியின் நீரை தடுப்பது போர் அறிவிப்பாகக் கருதப்படும் என்றும் பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.


அத்துடன் இரு நாடுகளும் தங்கள் முப்படைகளையும் தயார் நிலையில் இருக்குமாறு அறிவித்துள்ள நிலையில்  உலக  நாடுகள் இந்த விடயத்தை கூர்ந்து கவனித்து வருகி்ன்றன.


இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபை இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் நிலைமையை அமைதியாக கையாளுமாறு பரிந்துரை விடுத்துள்ளது.

 ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், “இந்தியாவும் பாகிஸ்தானும் அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடித்து நிலைமை மேலும் மோசமாக மாறுவதை தவிர்க்க வேண்டும்,” என வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலை கண்டிப்பதாக தெரிவித்த ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் , ” இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்சினைகளை பரஸ்பர பேச்சுவார்த்தை மூலம் அமைதியான முறையில் தீர்க்க முடியும் என்று நம்புவதாகவும் , இரு நாட்டு உறவும் மேலும் மோசமடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.