சிந்து நதி நீர் ஒப்பந்தம் என்றால் என்ன? முழுத் தகவல் இதோ!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் என்றால் என்ன முழுத் தகவல் இதோ!

காஷ்மீர் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து நடைபெற்ற பாதுகாப்புக்கான  அமைச்சரவை ஆலோசனை கூட்டதிற்கு பிறகு, இந்தியா -பாகிஸ்தான் இடையே 1960 ஆம் ஆண்டு கையெழுத்தான சிந்து நதி நீர் ஒப்பந்ததை நிறுத்தி வைப்பதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

1948 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்த போது, பாகிஸ்தானுக்கு செல்லும் நதி நீரும் நிறுத்தப்பட்டது. தங்கள் நாட்டிற்கு வரவேண்டிய நீரை இந்தியா தடுப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது.

இரு நாடுகளுக்கிடையே நிலவிய பதற்றமான சூழலை தடுக்கும் முயற்சியில் உலக வங்கி இறங்கியது. இதையடுத்து 1960 ஆம் ஆண்டு இந்தியாவிக்கும் பாகிஸ்தானிக்கும் இடையே சிந்து நதி நீர் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இந்தியா சார்பில் அப்போதைய பிரதமர் ஜவர்கலால் நேருவும், பாகிஸ்தான் சார்பில் அதிபர் முகமது அயூப் கானும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

ஒப்பந்தத்தின் படி சிந்து நதியின் கிழக்கு கிளை நதிகளான சட்லெஜ்,பியாஸ் மற்றும் ராவி ஆகிய நதிகள் இந்தியாவின் கட்டுப்பாட்டிலும், மேற்கு கிளை நதிகளான ஜீலம்,செனாப்,மற்றும் சிந்து ஆகிய நதிகள் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

இதன் பிறகு இரு நாடுகளும் இந்த ஒப்பந்தத்தின் படி சிந்து நதியின் நீரை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கார்கில் உள்பட மூன்று போர்கள் நடைபெற்றன. ஆனால் எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும், இந்த ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் இருந்ததில்லை,

மேலும் உரி பயங்கரவாத தாக்குதல் மற்றும் புல்வாம தாக்குதல் நடந்த போதும் கூட சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்ற ஊகங்கள் இருந்தன, ஆனால் அது அப்போது நடக்கவில்லை.

தற்போது காஷ்மீர் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிவலையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாத அமைப்பு பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தது என்பதால், பாகிஸ்தான் மீது அதிரடியாக பல்வேறு தடை நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக 1960 ஆம் ஆண்டு போடப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்தது. மேலும் பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்தும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என்று இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் படி எந்த ஒரு நாடும் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. இந்த ஒப்பந்தத்தில் எதாவது மாற்றங்களை செய்ய நினைத்தால் இரு நாடுகளும் கலந்து ஆலோசித்த பிறகே மாற்றங்கள் செய்ய முடியும். ஆனால் தற்போது சிந்து நதிதீர் ஒப்பந்தை நிறுத்துவதாக இந்தியா அரசு அறிவித்துள்ளது.

இந்தியா சிந்து நதி நீரை நிறுத்திவிட்டால் பாகிஸ்தானில் மிகப்பெரிய வறட்சி ஏற்படும் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஏனென்றால் சிந்து நதியில் பாயும் தண்ணீரில் 80 சதவீதத்தை பயன்படுத்துவது பாகிஸ்தான் மட்டுமே.

இந்தியாவில் இருந்து வரும் தண்ணீர் நின்றுவிட்டாலும் மேற்கு பகுதி கிளை நதிகளில் இருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் கிடைக்கும். இருப்பினும் அது பாகிஸ்தானுக்கு போதுமானதாக இருக்காது.

சிந்து நதி தண்ணீரின்றி வறண்டால், பல மாகாணங்களில் விவசாயம் அடியோடு பாதிக்கப்படும், பல லட்சம் ஏக்கர் வளமான நிலம் தரிசாக மாறும். உணவு தானிய உற்பத்தி குறைந்து உணவுக்கு திண்டாடும் நிலை ஏற்படும். அதோடு பல கோடி மக்களின் குடிநீர் ஆதாரமே சிந்து நதிதான். இதனால் பாகிஸ்தான் கடும் குடிநீர் பஞ்சத்தை சந்திக்கும். நீர் மின் திட்டங்கள் மூலம் கிடைக்கும் மின்சாரம் கிடைக்காமல் கடுமையான மின்சார தட்டுப்பாடு ஏற்படும்  சூழல் இருப்பதாக பலரும் கருதுகின்றனர்..

இந்நிலையில் இந்தியா சிந்து நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ள நடவடிக்கையை ‘தண்ணீர் போர்’ என்றும் சட்டவிரோதமானது என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது.

மேலும் “சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ஒரு தலைபட்சமாக நிறுத்த முடியாது. இது உலக வங்கி போன்ற உலகளாவிய அமைப்புகள் சம்பந்தப்பட்டது. இந்த நடவடிக்கையை சட்டப்பூர்வமாக மேற்கொள்வோம் என்றும்” – பாகிஸ்தான் கூறியுள்ளது.

இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு எதிர் விணையாற்றும் வகையில் இந்திய தூதரக அதிகாரிகளை அங்கீகரிக்கப்படாத நபர்களாகவும், இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தானின் வான்வெளியில் செல்ல தடை விதித்தும்  மற்றும் இந்தியா பாகிஸ்தான் இடையே போரை நிறுத்தும் வகையிலும் நட்புறவை மேம்படுத்தும் வகையிலும் 1972ம் ஆண்டு  போடப்பட்ட சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் தற்போது அதிரடியாக அறிவித்துள்ளது.

இதையடுத்து  இரு நாடுகளுக்கு இடையே தற்போது பதற்றமான சூழல் நிலவி வருகிறது.