போரின் தொடக்கமா…? இந்தியா அதிரடி அறிவிப்பு!

போரின் தொடக்கமா… இந்தியா அதிரடி அறிவிப்பு!

தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து நடைபெற்ற பிரதமர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் 5 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தளமான பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று மாலை பிரதமர் இல்லத்தில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா,ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர்,தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சுமார் இரண்டரை மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது. பாகிஸ்தானுடன் 1960 ஆம் ஆண்டு போடப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

இதேபோல், இந்தியா – பாகிஸ்தான் எல்லையான பஞ்சாபில் அமைந்துள்ள அட்டாரி – வாகா சோதனைச் சாவடி உடனடியாக மூடப்படும் என்றும் அறிவித்துள்ளார். உரிய ஒப்புதலுடன் இந்தியா வந்தவர்கள், வரும் மே 1 ஆம் தேதிக்குள் அந்த வழியாக பாகிஸ்தான் திரும்ப வேண்டும் என்றும் கெடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்குள் பாகிஸ்தானியர்கள் வர ’சார்க்’ விசா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த விசா சேவையும் தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த விசா பெற்று ஏற்கனவே இந்தியா வந்த பாகிஸ்தானியர்கள் அனைவரும் 48 மணி நேரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

டெல்லியில் பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள பாதுகாப்பு, ராணுவம், கடற்படை, மற்றும் விமானப்படை சார்ந்த ஆலோசகர்கள் மே 01 தேதிக்குள் வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் 55 ஆக இருந்த அதிகாரிகளின் எண்ணிக்கை 30 குறைக்கப்பட்டுள்ளது.

இதேபோல் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் தூதரக அதிகாரிகள் அல்லாதவர்கள் உடனடியாக இந்தியவுக்கு திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பாகிஸ்தானில் இருக்கும் இந்திய தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறினார்.

இதையடுத்து  இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.