
தமிழக அமைச்சரவையில் தற்போது மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத் துறை அமைச்சராக இருந்து வரும் செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்றது மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்றம் உள்ளிட்ட மோசடி புகார்கள் அவர் மீது எழுந்தன,
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த அமலாக்கத்துறை கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அவரைக் கைது செய்தது. அதன் பிறகு விசாரணை கைதியாக சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் தர மறுத்தது. ஒரு கட்டத்தில் தமிழக அமைச்சரவையில் இருந்தும் விலக்கப்பட்டார்.
இதையடுத்து 15 மாதங்களுக்கு பின்னர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மேல் முறையீட்டு மனுவில் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. சிறையில் இருந்து வெளியே வந்த மூன்றாவது நாளே அவர் வகித்த இலாக்காவை முதலமைச்சர் மீண்டும் வழங்கி அமைச்சராக்கினார்.
செந்தில் பாலாஜி மீதான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில், அவரை மீண்டும் அமைச்சராக்கியிருப்பது மூலம், விசாரணையில் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தக் கூடும், எனவே ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் வித்யா குமார் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதன் கூடவே, செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறையும் தனியாக மனு தாக்கல் செய்தது. இந்த இரண்டு மனுவையும் ஒரே வழக்காக உச்ச நீதிமன்ற நீதிபதி அபய் எஸ் ஓகா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் முந்தைய விசாரணையின் போது செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்கிறாரா இல்லையா என்பதைக் தெரிவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது,
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது ‘ செந்தில் பாலஜி தனது அதிகாரத்தை பயன்படுத்தி சாட்சிகளை கலைப்பார் என்ற அச்சம் இருந்தால் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றலாம் என செந்தில் பாலாஜி தரப்பினர் வாதங்களை முன் வைத்தனர்.
அதற்கு உச்ச நீதிமன்றம், உங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்க மூன்று வாய்ப்புகள் தரப்பட்டது. ஆனால் அதை நீங்கள் பயன்படுத்தவில்லை. இந்த வழக்கில் ஆயிரக்கணக்கான சாட்சிகள் விசாரிக்கப்பட வேண்டி இருக்கிறது, அதனால் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றுவது என்பது இயலாத காரியம் என கூறி, இந்த கோரிக்கையை நிராகரித்தப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதி கூறினார்.
மேலும் உங்களுக்கு ஜானீன் வழங்கியது வழக்கின் தன்மை அடிப்படையில் அல்ல, அரசியல் சாசனப் பிரிவு 21-ன் படி அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதால் தான் வழங்கப்பட்டது.
PMLA வழக்கில் ஜாமீன் கிடைப்பது இப்பொழுதெல்லாம் கடிமனாது. இருப்பினும் அதையும் மீறி உங்களுக்கு ஜாமீன் வழங்கினால், நீங்கள் மீண்டும் அமைச்சராக பொருப்பேற்று இந்த நீதிமன்றத்தை வேறு விதமாக கையாண்டு கொண்டிருக்குறீர்கள்.நாங்கள் செய்தது தவறு என நீங்களே நிரூபித்துவிட்டீர்கள். நாங்களும் அதை ஒப்புக்கொள்கிறோம்.
எனவே அமைச்சர் பதவியா?…ஜாமீனா?.. என்பதில் நீங்கள் எதை தேர்வு செய்ய விரும்புகிறீர்கள் என்று நீதிபதி கேட்டார். இதுகுறித்து திங்களன்று பதில் அளிப்பதாக செந்தில் பாலஜி தரப்பு கூறவே, விசாரணை திங்கள் கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.