
சுற்றுலா பயணிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுவரை 26 பேர் பலி ஆன நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேர் உட்பட 17 பேர் காயமடைந்துள்ளனர்.
சவுதி அரேபியா பயணத்தை பாதியில் முடித்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி நாடு திரும்பி உள்ளார்.
ராணுவ சீருடையில் வந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். நடந்தது என்ன என்பதை பற்றி முழுமையாக இந்த பதிவில் காண்போம்.
ஜம்மு காஷ்மீரின் தெற்குப் பகுதியில் உள்ள பஹல்காமை அடுத்த பைசரன் பள்ளத்தாக்குப் பகுதியில் இயங்கி வரும் சுற்றுலா விடுதியில் வெளிநாடு உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தா சுற்றுலா பயணிகள் புல்வெளியில் குதிரை சவாரி உள்ளிட்ட கேளிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.
அந்த சமயத்தில் ராணுவ சீருடையில் அங்கு நுழைந்த தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகளை கண்மூடித்தனமாக ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்றனர். இந்த கொடூர தாக்குதலில் வெளிநாட்டினர் 2 பேர் உட்பட 26 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த கோர தாக்குதலில் இந்திய கடற்படையைச் சேர்ந்த அதிகாரி மற்றும் ஐதராபாத் உளவுப் பிரிவு அதிகாரி உள்ளிட்டோரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் தமிழ் நாட்டைச் சேர்ந்த 3பேர் உட்பட 17 பேர் காயமடைந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் சுற்றுலா பயணிகளின் மதங்களை கேட்டு, அதன் பின் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் வெளியாகும் செய்தி காண்போரை அதிர்ச்சியடைய வைக்கிறது.
இந்த சம்பவத்தை அடுத்து இந்திய பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டதாகவும், மேலும் தேடுதல் வேட்டை தொடர்வதாகவும் இந்திய ராணுவ தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தபட்ட இந்த கொடூரமான தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாக கொண்ட தீவிரவாத அமைப்பான லஷ்கர்- இ- தொய்பாவுடன் தொடர்புடைய ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் அமைப்பு பொறுபேற்றுள்ளது.
இந்நிலையில் இந்த தாக்குதலுக்கும் தங்கள் நாட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் விளக்கமளித்துள்ளார். மேலும் பயங்கரவாதத்தை நாங்கள் ஆதரித்ததில்லை, எனவே இதற்கு பாகிஸ்தனை குறை கூற வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த கொடூர தாக்குதலை அடுத்து பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் படி காஷ்மீர் விரைந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்தார். மேலும் உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சமும், காயமடந்தவர்களுக்கு 2 லட்சமும் வழங்கப்படுவதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அறிவித்துள்ளார்.
இதனிடையே இரண்டு நாள் அரசு முறை பயணமாக சவுதி அரேபியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி தனது பயணத்தை பாதியில் முடித்து கொண்டு இந்தியா திரும்பியுள்ளார். மேலும் இதுகுறித்து தனது X பக்கத்தில் பிரதமர் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதில் “ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது.
இந்தக் கொடூர செயலின் பின்னணியில் உள்ளவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்… அவர்கள் தப்ப முடியாது! அவர்களின் தீய எண்ணம் ஒருபோதும் வெற்றி பெறாது. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான நமது தீர்மானம் அசைக்க முடியாதது, அது மேலும் வலுவடையும்.” என்று குறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்க துணை அதிபர் இந்தியா வந்துள்ள நிலையில், நடைபெற்றுள்ள இந்த கொடூர சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசிய வாயிலாக பிரதமர் மோடியிடம் கேட்டறிந்தார். மேலும் ரஷ்யா நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் இந்த சூழலில் இந்தியாவுடன் கைகோர்த்து நிற்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஒன்றிய அரசோடு உறுதுணையாக இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலின் உட்பட இந்தியாவின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கூறியுள்ளனர்.
தீவிரவாத தாக்குதல் குறித்து ஒன்றிய அமைச்சரவை விவாதித்து வரும் நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த கூட்டத்தில் பதில் தாக்குதல், தீவிரவாதிகளை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.