
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்த கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாகி உள்ளது.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ ஜெயசீலன், தனது கூடலூர் தொகுதியில் வேலை வாய்ப்புகள் உருவாகும் வகையில் சிறிய தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க முடியுமா என கேட்டபோது, அதற்கு அமைச்சர் பதிலளித்த விதம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது
அதாவது ”இந்த கூட்டத் தொடரிலேயே என்னுடைய துறையில் இருக்கின்ற சிக்கல்களை நான் கூறியிருக்கிறேன். நிதியும் குறைவாக ஒதுக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களைப் போல எல்லாம் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களும் எங்கள் தொழில்நுட்ப துறையில் செயல்படுவதில்லை. எனவே, யாரிடம் நிதியும், திறனும், அதிகாரமும் இருக்கிறதோ அவரிடம் கேட்டால் அவர் செய்து கொடுப்பார் என்று நான் கருதுகிறேன். எங்களிடம் அது இல்லை” ” என்று வெளிப்படையாக ஆளும் கட்சியை விமர்சிப்பது போல பதிலளித்துள்ளார்
இந்த பதிலை கேட்டு அதிர்ச்சியடைந்த சபாநாயகர் அப்பாவு . “ இதெல்லாம் நீங்கள் உள்ளுக்குள் பேசி, முதலமைச்சரிடம் முடிவெடுக்க வேண்டியது, பாசிட்டிவாக பதில் சொன்னால் உறுப்பினர்களுக்கு நன்றாக இருக்கும்” என அறிவுறுத்தியுள்ளார்.
அமைச்சரின் இந்தக் கருத்துகள், தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் தொழில் வளர்ச்சி துறையிடையே ஏதேனும் கருத்து வேறுபாடுகள் உள்ளதா எனும் சந்தேகத்தையும் கிளப்பியுள்ளன.
மேலும் 2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைந்ததும் பழனிவேல் தியாகராஜன் தான் நிதி அமைச்சராக பொறுப்பேற்றார். பின்னர் அவர் ஆளும் கட்சியை பற்றி தவறாக பேசியதாக கூறப்படும் ஆடியோ ஒன்று வெளியாகியிருந்தது
அந்த ஆடியோ முற்றிலும் போலியானது என்று பழனிவேல் தியாகராஜன் முற்றிலும் மறுத்திருந்தாலும் அடுத்த சில நாட்களிலேயே, நிதித்துறை இலாகா அவரிடமிருந்து தங்கம் தென்னரசுக்கு மாற்றப்பட்டு, தகவல் தொழில்நுட்பத் துறைக்கு பழனிவேல் தியாகராஜன் அமைச்சராக்கப்பட்டார்
இதனால், அவர் தற்போது தன் புதிய துறையில் எதிர்பார்த்த முக்கியத்துவம் இல்லை என்ற அதிருப்தியில் செயல்படுகிறார் என்ற கருத்துக்களும் இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது