பழைய ஓய்வூதிய திட்டம்  குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்த கருத்து என்ன?

பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்த கருத்து என்ன

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான கோரிக்கையில் உரிய நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.  

தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2025 – 2026 நிதிநிலை அறிக்கைக்கான கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்றைய பேரவை அமர்வில் மின்சாரம், மரபுசாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு மற்றும் கலால் வரி, ஆயத்தீர்வை ஆகிய துறைகளை சார்ந்த மானிய கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டன. 

இந்தக் கூட்டத்தில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுமா எனக் கேள்வி எழுப்பினார்.

இக்கேள்விக்கு பதிலளித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு ஊழியர்களின் நலனில் அதிக அக்கறையுடன் செயல்பட்டு வருவதாகவும், ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக சிரத்தையுடன் அரசியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். 

மேலும்,  ககன்தீப் சிங் பேடி தலைமையில் அரசு குழு ஒன்று அமைக்கப்பட்டு,  ஆய்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்  ஒன்பது மாத கால அவகாசத்திற்குள் அரசுக்குத் திருப்திகரமான அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாகவும்  சுட்டிக்காட்டினார் 

பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டுமென அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர். 

இது திமுகவின் 2021ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலும் வாக்குறுதியாக இடம்பெற்றிருந்தது. ஆனால் இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்பதால் ஊழியர்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலைமை எதிர்வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் முக்கியமான அரசியல் விவகாரமாக பேசப்படும்  என கூறப்படுகிறது. 

இந்த நிலையில்  பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படுமா என்பது தொடர்பாக தமிழக அரசு உரிய நேரத்தில் உறுதியான முடிவை எடுக்கும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டமன்றத்தில் உறுதிமொழி அளித்துள்ளார்.